பள்ளியின் தாளாளர் ஒருவர், தலைமை ஆசிரியரை சரமாரியாகத் தாக்கியதோடு, மாணவர்களையும் வகுப்பறையில் சிறைவைத்து பூட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனி திட்டசாலையில் மஹாராஜா என்கிற அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சென்றாயப்பெருமாள் என்பவரும், ஆசிரியையாக சுமதி என்பவரும் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புவரை 30 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இப்பள்ளியின் தாளாளராக இருப்பவர் அன்பழகன். இவர், தேனி அல்லி நகரத்தில் உள்ள முத்தையா அரசு உதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆனால், ஒரு பள்ளியின் தாளாளராக இருப்பவர், மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றுவது கல்வித்துறை விதிமுறைகளுக்குப் புறம்பானது.
எனவே, அன்பழகன் ஒரு பள்ளியின் தாளாளராக இருந்துகொண்டு மற்றொரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பது தொடர்பாக, கல்வி துறைக்கு யாரோ புகார் அனுப்பி இருக்கிறார்கள். ஆனால், அன்பழகன் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேசமயம், மேற்படி புகாருக்கு தனது பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் சென்றாயப்பெருமாளும், ஆசிரியையாகப் பணியாற்றும் சுமதியும்தான் காரணம் என்று அன்பழகன் கருதி இருக்கிறார். ஆகவே, இருவரையும் துன்புறுத்தி வந்ததோடு, பல மாதங்களாக சம்பளமும் வழங்காமல் இருந்திருக்கிறார். ஆகவே, நீதிமன்றத்தை நாடிய இருவரும் தற்போது அரசிடமிருந்து நேரிடையாக சம்பளம் பெற்று வருகிறார்கள்.
இந்த சூழலில், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்ராயப்பெருமளை மாணவர்கள் முன்னிலையில் சரமாரியாகத் தாக்கியதோடு, கீழேயும் தள்ளி விட்டிருக்கிறார். இதனால், சென்றாயப்பெருமாள் தடுமாறி கீழே விழுந்தார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் ஆசிரியை சுமதி தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதைக்கண்ட தாளாளர் அன்பழகன், இது எனது பள்ளி, நீங்கள் இருவரும் வெளியே செல்லுங்கள் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். ஆனால், பள்ளி நேரம் முடியாததால் வெளியில் செல்ல முடியாது என்று ஆசிரியர்கள் இருவரும் மறுத்து விட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன், ஆசிரியர்கள் இருவரோடு, மாணவர்களையும் வகுப்பறைக்குள் வைத்து பூட்டியதோடு, பள்ளியின் மெயின் கேட்டையும் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். இதனிடையே, தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாளை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் செய்தி சேகரிப்பதற்காக பள்ளிக்கு படையெடுத்தனர். மேலும், இத்தகவல் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றவர்கள், மாணவர்களை மீட்டு பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவ்விவகாரம் தொடர்பாக, தலைமை ஆசிரியர் சென்றாயப்பெருமாள் மற்றும் ஆசிரியை சுமதி ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலகத்தில் புகார் செய்தனர். இதனடிப்படையில் கல்வித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயம், விவகாரம் விஸ்வரூபமானதை அறிந்த பள்ளித் தாளாளர் அன்பழகன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளித் தாளாளர் அன்பழகன், தலைமை ஆசிரியரை தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக் கண்ட பலரும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே அராஜகங்கள் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.