உதயநிதியின் கடைசி படத்துக்கு ஆப்பு..? ‘மாமன்னன்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி போஸ்டர், வழக்கு!

உதயநிதியின் கடைசி படத்துக்கு ஆப்பு..? ‘மாமன்னன்’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி போஸ்டர், வழக்கு!

Share it if you like it

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாமன்னன் திரைப்படம், ஜாதி மோதலை தூண்டும் வகையில் இருப்பதால், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தேனி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாமன்னன். இப்படம் எதிர்வரும் 29-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதுதான் தனது கடைசி திரைப்படம் என்று உதயநிதி கூறியிருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், தேவர்மகன் திரைப்படம் குறித்து பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

இந்த நிலையில்தான், மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. அப்போஸ்டரில், மாமன்னன் திரைப்படம் தமிழகத்தில் ஜாதி மோதல்களை உருவாக்கும் வகையில் இருக்கிறது. எனவே, அப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருக்கிறது. மேலும், போராட தூண்டாதே என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மாமன்னன் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சம்பவமும் அரங்கேறி இருக்கிறது. இது தொடர்பாக, ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த மனுவில், “இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்கிற திரைப்படம் தயாராகி வருகிறது. 2018-ம் ஆண்டு துவங்கிய படப்பிடிப்பு 80 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது. மீதி 20 சதவிகித படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ‘ஏஞ்சல்’ படத்தை நிறைவு செய்யாமல் ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அதோடு, மாமன்னன் படம்தான் தனது கடைசி படம் என்றும் கூறியிருக்கிறார். அதோடு, ‘ஏஞ்சல்’ படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். ‘ஏஞ்சல்’ படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இப்படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். ஆகவே, ‘ஏஞ்சல்’ படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். தவிர, 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை ‘மாமன்னன்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது. ஆகவே, உதயநிதியின் மாமன்னன் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it