தனி தமிழ்நாடு முழக்கம் திருமா பதவிக்கு ஆப்பு?

தனி தமிழ்நாடு முழக்கம் திருமா பதவிக்கு ஆப்பு?

Share it if you like it

கங்கை கரை வரை சென்று நீரெடுத்து வந்து கோவில் கட்டினார் ராஜேந்திர சோழன். கண்ணகிக்கு கோவில் கட்ட இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்தார் சேரன் செங்குட்டுவன். நாட்டின் விடுதலைக்காக பிரம்படி வாங்கியவர்களும், செக்கிழுத்தவர்களும், உயிர், உடமைகளை இழந்தவர்களும் பல லட்சம் பேர். இவர்களின் தாரக மந்திரம் வந்தே மாதரம், வெள்ளையனே வெளியேறு.

இந்தியாவை விட்டு வெளியேறு என்று தான் போராடினார்கள் தவிர்த்து, டில்லியை விட்டு போ, கல்கத்தாவை விட்டு போ, மதராஸை விட்டு போ என்று சொல்லவில்லை. 1905ல் வங்க பிரிவினையை எதிர்த்து வ.உ.சி இங்கு குரல் கொடுத்தார். பாரதி சேதமில்லாத ஹிந்துஸ்தானம், அதை தெய்வம் என்று கும்பிடடி பாப்பா என்றார்.

இமயம் முதல் குமரி வரை, குஜராத் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இது ஒரே நாடு. இவ்வாறு தான் வாழ்ந்து வருகிறோம். நமது அரசியலமைப்பு சட்டமும் இதை தான் சொல்கிறது.

மாநில எல்லைகள் என்பது நிர்வாக வசதிக்காக போடப்பட்டது தானே தவிர்த்து, அவை தனி அங்கங்கள் அல்ல. இது எல்லாம் சாமானியருக்கு தெரியும். 8ம் வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், கட்சி தலைவராகவும் உள்ள திருமாவளவனுக்கு இதெல்லாம் தெரியாதா? ஆனால் அவர் வேண்டுமென்றே பிரிவினையை தூண்டும் விதமாக பேசி வருகிறார், கட்சி தொண்டர்களை தவறாக வழிகாட்டி வருகிறார்.

நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசும் போது, தமிழ் தேசியம் என்றால் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருப்பது அல்ல. அதன் முக்கிய நோக்கம் தனி தமிழ்நாடு எனும் நாடு என்று பேசியுள்ளார்.

அம்பேத்கரின் சீடர்கள் என்று தனக்கு தானே சொல்லிக் கொள்ளும் திருமாவளவன் இவ்வாறு பேசுவது, அம்பேத்கரையே அவமதிப்பது போல் ஆகும். இந்த நாட்டிற்காக போராடிய எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை சிறுமைப்படுத்துவது போன்றது. முழுக்க முழுக்க பிரிவினைவாத எண்ணங்களை மனதில் கொண்டு விட்டு, அவற்றை மக்கள் மத்தியில் உளறி விட்டு சென்றுள்ளார் திருமாவளவன்.

பிரிவினையை ஆதரித்தால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டம் உள்ளது. இதனால் தான் அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு முழக்கத்தை அண்ணாதுரை கை விட்டார். இப்போது திருமா பிரிவினை பேசியுள்ளார். அவரது நாடாளுமன்ற பதவி பறிக்கப்பட வேண்டும், கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற வாதத்திலும் நியாயம் இருப்பது போலவே தெரிகிறது.

ஆளும் திமுகவும், கூட்டணியான காங்கிரசும் இந்த பேச்சை,கண்டிப்பார்கள் என்றோ திருமாவளவனை மன்னிப்பு கேட்க சொல்வார்கள் என்றோ, நமக்கு நம்பிக்கையில்லை. ஒருவேளை நமது நம்பிக்கை பொய்க்கிறதா என்று பார்ப்போம்.

சிவராம கிருஷ்ணன்


Share it if you like it