திருமா மீதான கொலை முயற்சி வழக்கு: ஐகோர்ட் புது உத்தரவு!

திருமா மீதான கொலை முயற்சி வழக்கு: ஐகோர்ட் புது உத்தரவு!

Share it if you like it

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீதான கொலை முயற்சி வழக்கு குறித்த விசாரணையின் நிலை என்ன என்பது தொடர்பானத அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை நந்தம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வேதா அருண் நாகராஜன். இவர், கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்திப்பதற்காக, அவரது கட்சி அலுவகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது, அவரை அங்கிருந்த வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் தாக்கியதாக, நந்தம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். அப்புகாரில், தன்னையும், தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் தாக்கியவர்கள், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளையும் பறித்துக் கொண்டதாகவும், இத்தாக்குதலுக்கு திருமாவளவன்தான் காரணம் என்றும் கூறியிருந்தார்.

இதனடிப்படையில், வீரப்பன், திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிராக கொலை முயற்சி, திருட்டு, ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக திருமாவளவன் உள்ளிட்டோர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடந்த 11 ஆண்டுகளாக எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருந்துவரும் இந்த வழக்கில், உடனடியாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதா அருண் நாகராஜன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, “இவ்வழக்கு முதலில் நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர், வேளச்சேரி காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கண்டுபிடிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்” என்று கோரினார். இதையேற்றுக் கொண்ட நீதிபதி, “வழக்கு தொடர்பான ஆவணங்களையும், வழக்கின் விசாரணை நிலை குறித்தும் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.


Share it if you like it