7 கி.மீ. தூரத்துக்கு வரிசை; திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: பயணத்தை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள்!

7 கி.மீ. தூரத்துக்கு வரிசை; திருப்பதியில் குவிந்த பக்தர்கள்: பயணத்தை மாற்றிக் கொள்ள தேவஸ்தானம் வேண்டுகோள்!

Share it if you like it

பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கும் காரணத்தால் வி.ஐ.பி. தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொண்டிருக்கிறது.

முக்கிய வைணவ ஸ்தலமான திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியின் போதும், திருவிழா காலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். ஆனால், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக கடந்த ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்படும் நிகழ்ச்சி சிம்பிளாகவே முடிக்கப்பட்டது. அதாவது, சொர்க்க வாசம் திறக்கப்பட்டிருக்கும் 10 நாட்களுக்கும் தினசரி 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணாக, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில், தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறது. எனவே, இம்மாதத்தின் ஏகாதசியை முன்னிட்டு, கருட சேவை தரிசனத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர். இதனால், சுமார் 48 மணி நேரம் வரிசையில் காத்திருந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், அதிக பக்தர்கள் கூட்டத்தால் ஸ்ரீவாரி தரிசனத்திற்கு அதிக நேரம் எடுத்தது. வைகுண்ட தரிசனத்திற்கான வரிசை சுமார் 2 கி.மீ அளவுக்கு நீண்டு காணப்பட்டது. மேலும், தற்போது விடுமுறை நாட்கள் என்பதால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், சுமார் 7 கிலோ மீட்டர் நீளத்துக்கு வரிசை காத்திருக்கிறது. இலவச தரிசனம் செய்ய 48 மணி நேரமாவதாக கூறப்படுகிறது.

திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் தங்கும் அறைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அறைகள் கிடைக்காத பக்தர்கள் சொந்த வாகனங்கள், திறந்தவெளி ஆகியவற்றில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். இங்கு இடம் கிடைக்காத பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் சுமார் 48 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை நிலவுகிறது. எனினும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் செய்து கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்திருக்கும் காரணத்தால் வி.ஐ.பி. பக்தர்கள், சாதாரண பக்தர்கள் தங்களது திருமலை பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ளும்படி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டிருக்கிறது.


Share it if you like it