திருவள்ளூர் அருகே தி.மு.க. கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கும்பலால் ஒரு அப்பாவி கொலை செய்யப்பட்டிருப்பதோடு, 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ஆலாடு பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவரது பூர்வீக வீட்டில் உறவுக்கார பெண் நந்தினி வாடகைக்கு குடியிருந்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே, நந்தினியை வீட்டை காவி செய்யும்படி கூறியிருக்கிறார். ஆனால், வீட்டை காலி செய்த நத்தினி, சாவியை தரவில்லை. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, நந்தினிக்கு ஆதரவாக பொன்னேரி 17-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் இளங்கோ, எர்ணாவூர் ஹரிஹரன் மற்றும் பலரும் வந்திருக்கிறார்கள்.
பேச்சுவார்த்தை முற்றவே, இளங்கோ, ஹரிஹரன் உள்ளிட்டோர் காயத்ரியையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார்கள். இதனால், காயத்திரியும், அவரது சகோதரி கீர்த்தியும் உதவி கேட்டு அலறும் நிலை ஏற்பட்டது. பின்னர், இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி. காட்சி ஆதாரத்துடன் பொன்னேரி போலீஸில் காயத்திரி புகார் அளித்தார். ஆனால், ஆளும்கட்சி பிரமுகர் என்பதால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், சிவில் பிரச்னை என்று கூறி அலைக்கழித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், காயத்ரி போலீஸில் புகார் அளிக்க உதவியாக இருந்த உறவினர்கள் ராபர்ட், பாலமுருகன் ஆகியோரை, கவுன்சிலர் இளங்கோவின் ஆதரவளர்களான வினோத், திலீப்குமார், ராஜ்கிரன் ஆகியோர் தாக்கி இருக்கிறார்கள். அப்போது, ராபர்ட் தப்பியோடிவிட்ட நிலையில், பாலமுருகனை கற்களால் தாக்கி இருக்கிறார்கள். இதில், பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன் பிறகு, போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்து கைது செய்திருந்தால், இந்த கொலை சம்பவம் நடந்திருக்காது.
தி.மு.க.வினரால் இன்னும் என்னென்ன அக்கிரமங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ?