வைணவ திவ்ய தேசங்கள் – ஆண்டு முழுவதும் திருமண உற்சவம்  காணும் திருவிடவெந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில்

வைணவ திவ்ய தேசங்கள் – ஆண்டு முழுவதும் திருமண உற்சவம் காணும் திருவிடவெந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவில்

Share it if you like it

பிருகு முனிவரின் தவத்திற்கு நாராயணன் அவருக்கு மருமகன் ஆகும் வரத்தை வழங்கிய வரம் நிறைவேற மகாலட்சுமி தாயாரை மகளாக வேண்டினார். பிரகமகரிசி அவருக்கு 365 பெண் குழந்தைகள் வரமானது. குழந்தைகள் திருமண வயதை எட்டியவுடன் கொடுத்த வரத்தின் படி திருமணத்திற்கு வரும்படி முனிவர் வேண்டுகோள் விடுக்க நாராயணன் எழுந்தருளினார். எந்த மகளை திருமணம் செய்து கொள்வது? என்ற கேள்வி எழுந்தது. தாங்கள் மட்டுமே எனக்கு மருமகன். அதனால் அத்தனை பெண்களையும் நீங்களே மணந்து கொள்ள வேண்டும் என்று மகரிஷி வேண்டுகோள் வைத்த அவரின் விருப்பப்படி அவரின் மகள்கள் அத்தனை பேரையும் நாராயணன் திருமணம் செய்து கொண்டார் .தினமும் ஒரு மகளுடன் திருமணம் என்ற வகையில் ஆண்டின் 365 நாட்களும் திருமண உற்சவம் கண்டார். பிருகு முனிவர் தந்தையாக மகளை தாரை வார்த்த கொடுக்க மகாலட்சுமி கரம்பற்றி திருமணம் செய்யும் நாராயணனின் திவ்ய திருமணத்தை ஆதிவராகராக எழுந்தருளி நடத்திக் கொடுத்தார். தினமும் காலையில் திருமண உற்சவமும் மாலையில் ஊஞ்சல் உற்சவம் என்று ஆண்டுதோறும் நாராயணனின் திருமண சேவை இன்றளவும் நாராயண திருமண கோலம் திருவிடந்தையில் தினமும் நடந்தேறுகிறது.

மூலவர் : லட்சுமி வராகப் பெருமாள்

உற்சவர் : நித்ய கல்யாணப் பெருமாள்

தாயார் : கோமளவல்லி தாயார்.

தல விருட்சம் : புன்னை, ஆனை

நாராயணன் திருமணத்தை முன்னின்று நடத்திய ஆதி வராகர் இன்றளவும் மூலவராக பெரும் தெய்வமாக முதல் மரியாதையோடு வணங்கப்படுகிறார். மலர் மகளை மடியேந்தி கனிந்த பார்வையும் வாஞ்சையமாக கருவறையில் எழுந்தருளிய தம்பதியர் திவ்ய கோலம் காண்போரை மதி மயக்கும். இந்த கோவில் கருவறை அவருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. நித்திய கல்யாண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் உற்சவரராக எழுந்தருளி திருமண கோலத்தில் காட்சி தருகிறார். கல்யாண விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் மூலவர் நித்ய கல்யாணப் பெருமாள் அருள்பாலிக்கிறார்.மூலவரின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித் தாயார் சந்நிதியும், இடது புறத்தில் ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளன. திருவரங்கப் பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது.

திருமணத் தடைகள் அகற்றும் பரிகார தலமாக விளங்குகிறது . திருமண தடை உள்ளவர்கள் ஒற்றை மாலை வாங்கி சுவாமிக்கு அணிவித்து திருமண நேர்த்திக்கடன் வைத்துப் போவதும் திருமணம் நடந்தேறிய பிறகு தம்பதியராக வந்து சுவாமிக்கும் தாயாருக்கும் மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தி அந்த மாலையை பிரசாதமாக பெற்று அதை அணிந்து பிரதட்சனை வலம் வருவதும் ஆலய சிறப்பு. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று. கடற்கரையில் அமையப்பெற்ற வைணவ தேசங்களில் சிறப்பானது பல்லவ தேசத்தில் உள்ள 18 திவ்ய தேசங்களில் ஒன்று.

அமைவிடம் – தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை – மகாபலிபுரம் சாலை மார்க்கத்தில் திருப்போரூர் – மகாபலிபுரம் மார்க்கத்தில் அமைந்துள்ளது. கடற்கரை ஒட்டிய கோவில் என்பதால் சுற்றுலா பயணிகள் ஏராளம் உண்டு .மாநில நெடுஞ்சாலையின் அருகிலேயே உள்ள ஆலயம் என்பதால் எளிதாக அடையலாம். கோவில் நடை திறப்பு – காலை 7 மணி முதல் 12 மணி வரை . மாலை 4 மணி முதல் 8 மணி வரை . விசேஷ தினங்களில் கூடுதல் நடை திறப்பு உண்டு.

பிரதி மாத அமாவாசை – பௌர்ணமி – திருவோண நட்சத்திரம் – ஏகாதசி திதி – தமிழ் வருட பிறப்பு ஆடி ஒன்று . தை ஒன்று . வைகாசி பிரம்மோற்சவம்- ஆடிப்பூரம் – புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்கள் – நவராத்திரி – தீபாவளி பண்டிகை – வைகுண்ட ஏகாதசி – மாசி மகம் – பங்குனி உத்திரம் என்று விசேஷ நாட்களிலும் விசேஷ பூஜைகள் உட்பட திருமண உற்சவ சேவையும் உண்டு.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கடற்கரை திவ்ய தேசங்களில் ஒன்றான தினமும் திருமண உற்சவம் காணும் நித்ய கல்யாண பெருமாளை தரிசனம் செய்து வருவோம். திருமண தடை நீங்கி மங்கல வாழ்வு பெறுவோம்.


Share it if you like it