பிரதமரின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல்!
பிரதமர் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். கட்சியைக் கடந்து, மாநிலத்தைக் கடந்து, மொழியைக் கடந்து, அனைவராலும் போற்றப் படும் நபராகவே, பிரதமர் இருப்பார். நம் நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும், பிரதமர் பொதுவானவர். வெளி நாட்டிற்கு செல்லும் போது, அவரே நமது அனைவரின் பிரதிநிதியாக செயல் படுவார்.
உலகின் மிகவும் அதிநவீன பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் பிரதமரைச் சுற்றி, பல உயரிய அதிகாரிகள், பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள். அந்த அளவிற்கு, பாதுகாப்புக் கொண்ட நபருக்கே, தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டது, இந்திய மக்களை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது.
பிரதமர் பாதுகாப்பிற்கான திட்டம் :
“சிறப்பு பாதுகாப்பு குழு” என அழைக்கப் படும் SPG (Special Protection Group), பிரதமருக்கு அருகிலேயே, பாதுகாப்பிற்காக இருக்கும். “நீல புத்தகம்” என அழைக்கப் படும் (Blue Book), பிரதமருக்கான பாதுகாப்புப் பயண வழிகாட்டு நெறி முறைகளின் படி, மாநில காவல் துறையும் – மத்திய அதிகாரிகளும் இணைந்து, பிரதமருக்கான பாதுகாப்புப் பயணங்களை திட்டமிடுவார்கள்.
பிரதமர் வருகைக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே, சம்பந்தப்பட்ட இடத்தை மத்திய உளவுத் துறை (Intelligence Bureau) அதிகாரிகளுடன், மாநில காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து பார்வையிடுவார்கள்.
ஒவ்வொரு நிமிடமும், பிரதமரின் பயண விபரங்கள், குறிப்புகளாக சேகரிக்கப் பட்டு, அதன் படி, எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளும், மிக கவனமாக மேற்கொள்ளப் படும்.
வான் வழியாகவோ, ரயில் வழியாகவோ அல்லது சாலை வழியாகவோ, எந்த வழியாக பிரதமர் வர இருக்கின்றாரோ, அதற்கு ஏற்றார் போல, பயணத் திட்டம் அமைக்கப் படும். மேலும், எங்கு “உலோகம் அறிகுறி” (Metal Detector) வைக்க வேண்டும், “தீயணைப்பு வாகன வண்டி” எங்கு இருக்க வேண்டும் என்ற விவரங்களைப் பற்றியும் முடிவு எடுக்கப் படும்.
ஒருவேளை சீதோஷ்ண நிலை (Climate Change) மாறினாலும், அதற்கு ஏற்றார் போல், பிரதமரின் பயணத் திட்டம், மாற்றிஅமைக்கப் படும். ஒருவேளை படகு வழியாக பயணம் மேற்கொள்ள விரும்பினால், அதற்கு ஏற்றார் போலவும், பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப் படும். செல்லும் வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தாலும், சாலைகளில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும், முன் யோசனையுடன் மாற்று ஏற்பாடு தயாரிக்கப் படும்.
பிரதமருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு என்பது, அருகில் இருந்து கொடுக்கப் படுவது மட்டுமே. எந்த ஒரு மாநிலத்திற்கு சென்றாலும், அந்த மாநில காவல் துறையினரே, முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது மரபு.
ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்ற தகவல்கள் மத்திய – மாநில உளவுத்துறைக்கு வந்தால், அதை தெரிவிக்க வேண்டியது, அவர்களது கடமை. எனினும், எல்லா வகையிலும் அலசி ஆராய்ந்த பின்னரே, உளவுத்துறை பிரதமரின் பயணத்திற்கு அனுமதி அளிக்கும்.
பிரதமர் தங்க நேர்ந்தால், எஸ்.பி. அளவில் இருக்கும் அதிகாரிகளின் தலைமையில், அவருக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப் படும்.
ஏன் இந்த அளவிற்கு இந்திய பிரதமருக்கு பாதுகாப்பு :
பாரத பிரதமராக இருந்த இந்திரா காந்தி, கூட பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளியாலே, படுகொலை செய்யப் பட்டார். ராஜிவ் காந்தி, குண்டு வைத்து படுகொலை செய்யப் பட்டார். தமிழகத்திற்கு வருகை புரிந்த போது, இந்திரா காந்தி மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது, நமக்கு நன்கு நினைவு இருக்கும்.
எனவே தான், பிரதமருக்கு உச்சபட்ச பாதுகாப்பு அளிக்க “சிறப்பு பாதுகாப்பு குழு” அமைக்கப் பட்டது. உள் நாட்டிற்கோ அல்லது வெளி நாட்டிற்கோ, பிரதமர் எங்கு சென்றாலும், அவருக்கு உச்சபட்ச பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டு, தற்போது அளிக்கப் பட்டும் வருகின்றது.
நடந்தது என்ன?:
ஜனவரி 5, 2022 அன்று, பாரதப் பிரதமர் பஞ்சாப்பில் உள்ள ஃபெரோஸ்பூருக்கு (Ferozepur) பயணம் மேற்கொண்டார். அவருடைய பயணம் குறித்த விபரங்கள், முன்கூட்டியே பஞ்சாப் அரசுக்கு தெரிவிக்கப் பட்டு இருந்தது. வானிலை சரியில்லாத காரணத்தினால், அவர் பஞ்சாப் சென்று அடைந்ததும், சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டார்.
சாலை வழி பயணம் எனில், பஞ்சாப் மாநில போலீசாரே முழு பாதுகாப்பு அளித்து இருக்க வேண்டும். ஆனால் பிரதமருடைய வாகனம், 15 முதல் 20 நிமிடங்களுக்கு நடு வழியில் நிறுத்தப் பட்டது, நாடு முழுவதும் மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சூழ்நிலையில், பஞ்சாப் டி.ஜி.பி. மாற்றுப் பாதையில் பயணம் செய்ய, வழி அமைத்துக் கொடுத்து இருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யவில்லை! ஏன்? என்ற கேள்விக்கு, இதுவரை பதில் இல்லை. பிரதமரை வரவேற்க முதல்வர் சென்றிருக்க வேண்டும், அவரும் செல்லவில்லை.
முதல்வர் அலுவலகத்தை, தொலைப் பேசி மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அந்த நேரத்தில் தொலைப் பேசி எடுக்காதது ஏன்? என்பது புரியவில்லை.
முதல்வர் என்பவர், எந்த நேரத்திலும் மக்கள் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து, தொலைப்பேசி மூலம் அழைக்கப்பட்ட போதும், ஏன் அந்த அழைப்பை ஏற்கவில்லை என்பது, யாருக்கும் புரியாத புதிராகவே உள்ளது.
மணீஷ் திவாரி கிளப்பிய அச்சம்! :
பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், மூத்த தலைவருமான மணீஷ் திவாரி, நடந்த சம்பவத்திற்கு மிகவும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும், பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் அந்த இடத்தில், ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது வான் வழித் தாக்குதல் ஏற்பட்டு இருந்தாலோ, என்ன நிகழ்ந்து இருக்கும் என்ற அச்சத்தையும், அவர் வெளிப் படுத்தி இருந்தார்.
சதித் திட்டமா?:
2020 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி, ஒரு காணொளி, யூ-டியூப் (Youtube) தளத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டது. அது, தற்போது நடந்த நிகழ்வுகளைப் போலவே சித்தரிக்கப்பட்டு உள்ளது. பிரதமருடைய வாகனம் விவசாயிகளால் மறிக்கப் படுவது போலவும், பிரதமர் மட்டுமே தனியாக மாட்டிக் கொள்வது போன்ற காட்சிகள், அதில் சித்தரிக்கப் பட்டு இருந்தன.
இவை அனைத்திற்கும், தற்போது நடந்த சம்பவத்திற்கும், நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே, அந்தக் காணொளியைக் காண்பவர்கள் உணர்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகள்:
மோடி தலைமையிலான மத்திய அரசு, மூன்று வேளாண் மசோதாவை திரும்பப் பெற்ற பிறகும், “விவசாயிகளின் பெயரில்” போராட்டம் நடைபெறுவது ஏன்?
2021ஆம் ஆண்டு, குடியரசு தினத்தின் போது, செங்கோட்டையில் நடைபெற்ற போராட்டக்காரர்களின் கலவரம், நாட்டையே உலுக்கியது. ஒரு வருடம் ஆன பின்பும், இன்னும் போராட்டம் தொடர்வது ஏன்?
கொரோனா பரவல் அச்சுறுத்தலால், எல்லோரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில், பலபேர் கூடி, போராட்டம் செய்வது ஏன்?
பிரதமரின் பயணம் என்பது மிகுந்த கவனத்துடன் கையாளப் பட்டு, பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பயண விபரங்கள், வெளியே யாருக்கும் தெரியாமல், ரகசியம் காக்கப்பட வேண்டும், என்பது மரபு. ஆனால், பாதுகாப்புப் பயண விவரங்களை, காவல் துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர், கலவரக்காரர்களுக்கு பகிர்ந்ததாக, பிரபல ஆங்கிலத் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகின. இது போன்ற சம்பவங்களால், பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது, நாட்டு மக்கள் அனைவரையும், கவலைக்கு உள்ளாக்கியது.
இனியும், இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல், சரியான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். பிரதமர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து, பாதுகாப்பு அளிப்பதே, ஜனநாயக அடிப்படைப் பண்புகளில் ஒன்றாகும்.
காக்க காக்க கனகவேல் காக்க…
- அ. ஓம் பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai