திண்டிவனம் அருகே கடன் வாங்கியவரை கடத்திச் சென்று, ஒரு வீட்டில் 3 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தி.மு.க. நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர்.
திண்டிவனம் அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வருபவர் வேணு. இவர் தனது பட்டறையை விரிவுபடுத்துவதற்காக திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். 15 லட்சம் ரூபாயை திருப்பிச் செலுத்திய நிலையில், மீதி 25 லட்சம் ரூபாய்க்கு கால அவகாசம் கேட்டிருக்கிறார். இந்த சூழலில், இது தொடர்பாக திருவக்கரை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரும், தி.மு.க. நிர்வாகியுமான பாஸ்கரன், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வேணுவை வரச் சொல்லி இருக்கிறார்.
வேணுவும் அங்கு சென்ற நிலையில், திடீரென பாஸ்கரன் தனது ஆதரவாளர்கள் 5 பேருடன் சேர்ந்து வேணுவை கடத்திச் சென்றிருக்கிறார். பின்னர், அவரை ஒரு வீட்டில் அடைத்து வைத்து 3 நாட்களாக சித்ரவதை செய்திருக்கிறார்கள். 3 நாட்களுக்குப் பிறகு செல்போன் மூலம் தனது மனைவியை தொடர்புகொண்ட வேணு தகவல் தெரிவிக்கவே, போலீஸாருடன் சென்று மீட்டிருக்கிறார். இதுகுறித்த புகாரின் பேரில் பாஸ்கரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். தி.மு.க. நிர்வாகியின் இந்த அடாவடி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.