திருச்செந்தூர் கோயிலில் சபரீசன் தரிசனம்: 8 மணி நேரம் பக்தர்கள் கடும் அவதி!

திருச்செந்தூர் கோயிலில் சபரீசன் தரிசனம்: 8 மணி நேரம் பக்தர்கள் கடும் அவதி!

Share it if you like it

தமிழக முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன், நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தி, சுவாமி தரிசனம் செய்தார். இதன் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், சுமார் 8 மணி நேரம் கடும் அவதிக்குள்ளாகினர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்குதான் சூரபத்மனை முருகன் அழித்ததாக கந்தபுராணம் கூறுகிறது. இக்கோயில் கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் காரணமாக, திருச்சீலைவாய் மற்றும் ஜெயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்துவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனால், வசதி படைத்தவர்களும், அரசியல்வாதிகளும் இந்த யாகத்தை நடத்துவது வழக்கம்.

அந்த வகையில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வருகை தந்தார். அவருடன் தொழிலதிபர்கள் சிலரும் வந்திருந்தனர். இவர்கள் சென்னையில் நிலம் தொடர்பான சர்ச்சையில் சிக்கியவர்கள் என்று கூறப்படுகிறது. பின்னர், இவர்கள் கோயிலில் சத்ரு சம்ஹார யாகத்தை நடத்தினர். இதற்காக வள்ளிகுகைக்குச் செல்லும் கடற்கரையை ஒட்டிய பாதையை அடைத்து சாமியான பந்தல் அமைத்திருந்தனர்.

மேலும், இப்பந்தலைச் சுற்றி பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் ஹிந்து அறநிலையத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டு பக்தர்களை அனுமதிக்கவில்லை. இதற்கு இந்து முன்னணி அமைப்பினரும், பா.ஜ.க. ஆலய வழிபாட்டுக் குழுவினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், யாகம் நடந்த இடத்தைச் சுற்றிலும் பக்தர்கள் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. பிறகு, யாகம் முடிந்ததும், வடக்கு வாசல் வழியாக சபரீசனும், அவருடன் வந்தவர்களும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, புறப்பட்டனர்.

சபரீசன் வருகையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏக கெடுபிடிகள் இருந்தது. வள்ளிகுகை மட்டுமல்லாது கோயில் முழுவதுமே பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் வரை சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it