ஜல்லிக்கட்டு: கிறிஸ்டியன் காலனி மக்கள் எதிர்ப்பு!

ஜல்லிக்கட்டு: கிறிஸ்டியன் காலனி மக்கள் எதிர்ப்பு!

Share it if you like it

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கிறிஸ்டியன் காலனி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அழகுமலை ஊராட்சியில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியை ஜல்லிக்கட்டு காளையர் நலச் சங்கத்தினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நிகழாண்டும் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடு செய்து வருகின்றனர். இதற்குத்தான் கிறிஸ்டியன் காலனி மக்களும், நாடார் காலனி மக்களும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக, மேற்கண்ட இரு காலனி மக்களும் அழகுமலை ஊராட்சித் தலைவரிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 22-ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் நிகழாண்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும், இத்தீர்மானத்தோடு ஒரு புகார் மனுவையும் சேர்த்து மக்கள் குறைதீர் நாளான நேற்று திருப்பூர் மாவட்டக் கலெக்டரிடம் கொடுத்திருக்கிறார்கள். அந்த மனுவில், 2019-ம் ஆண்டு முதல் கடந்த 3 ஆண்டுகளாக அழகுமலை ஊராட்சியில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் கலந்துகொள்ளும் ஜல்லிக்கட்டு காளைகள், விவசாய நிலங்களில் பாய்ந்தோடுவதால், பயிர்கள் சேதமாகின்றன.

மேலும், ஏற்கெனவே நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது, போட்டியை காண வருபவர்கள் மது அருந்தி விட்டு வந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அதோடு, விவசாய பயிர்கள் மற்றும் செடி கொடிகள் சேதமாவதால், ஆடு, மாடுகளுக்கு உணவு கிடைப்பதில்லை. ஆகவே, நிகழாண்டு ஜல்லிக்ட்டு போட்டியை நடத்த வேண்டாம் என உத்தரவிட வேண்டும் என்று கலெக்டரிடம் கொடுத் மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டி என்பது ஒரு பாரம்பரிய விளையாட்டு.

ஆகவே, பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வாதாடி வரும் நிலையில், மத்திய அரசும் நடத்த ஆட்சேபனை இல்லை என்று ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையிலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று கிறிஸ்டியன் காலனி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it