போதையில் ரகளை… போட்டுத் தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்… உண்மையை உடைத்த போலீஸ்!

போதையில் ரகளை… போட்டுத் தாக்கிய வடமாநில தொழிலாளர்கள்… உண்மையை உடைத்த போலீஸ்!

Share it if you like it

திருப்பூரில் தமிழக தொழிலாளி ஒருவரை வடமாநில தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தாக்கியதாக ஊடகங்கள், சமூக ஊடகங்கள் பொய்ச் செய்தி பரப்பிய நிலையில், போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத்தான் தொழிலாளர்கள் தாக்கியதாக போலீஸ் விசாரணையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

திருப்பூர் மாநகர பகுதியான அனுப்பர்பாளையம், ஆத்துப்பளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2,000-த்துக்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட பனியன் கம்பெனிகளில் ஒடிஸா, ஜார்கண்ட், பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில வடமாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது, தமிழர்க தொழிலாளர்களின் எண்ணிக்கையை விட, வடமாநிலத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சில மடங்கு அதிகமாகும்.

இந்த சூழலில், அனுப்பர்பாளையம் – வேலம்பாளையம் செல்லும் சாலையில் திலகர் நகரில் அமைந்திருக்கும் ஒரு பனியன் கம்பெனியில் வேலைபார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர், தமிழக தொழிலாளர் ஒருவரை பெல்ட், கட்டை ஆகியவற்றால் விரட்டி விரட்டி தாக்கும் காட்சிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடத்திற்குச் சென்று வடமாநிலத் தொழிலாளர்களை கைது செய்யக் கோரி தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக சமூக வலைத்தள போராளிகள் கம்பு சுத்தத் தொடங்கினர். ஏற்கெனவே வடமாநிலத் தொழிலாளர்களால் தங்களது வேலைவாய்ப்பு பறிபோய் விட்டதாக பிதற்றிக் கொண்டிருக்கும் வெத்து வேட்டு கும்பல்கள், வடமாநிலத் தொழிலாளர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று கூக்குரல் எழுப்பினர்.

இது ஒருபுறம் இருக்க, மேற்கண்ட சம்பவம் குறித்து வேலம்பாளையம் போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்தான், உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதாவது, திலகர் நகரில் அமைந்திருக்கும் பனியன் கம்பெனியில் வேலைபார்க்கும் நபர் ஒருவர், கம்பெனிக்கு வெளியில் உள்ள டீக்கடைக்கு டீக்குடிக்கச் சென்றிருக்கிறார். அக்கடையில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் குடிபோதையில் புகைப்பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது, வடமாநிலத் தொழிலாளர் முகத்தின் மீது வேண்டுமென்றே புகையை ஊதியதோடு, வடமாநிலத் தொழிலாளரை நக்கல் நையாண்டி செய்து வம்பிழுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து, அந்த தொழிலாளி கம்பெனிக்குச் சென்று தனது நண்பர்களை அழைத்து வந்திருக்கிறார். இதில், வடமாநிலத்தவர் மட்டுமன்றி, தமிழர்களும் அடக்கம் என்பதுதான் ஹைலைட். இவர்கள்தான் மேற்கண்ட போதை தமிழர்களை போட்டு பொளந்து எடுத்திருக்கிறார்கள். உண்மை இப்படி இருக்க, தமிழக ஊடகங்களும், சமூக ஊடக போராளிகளும் பொய்ச் செய்தியை பரப்பி ஆர்கசம் அடைந்தனர். ஆகவே, உண்மை நிலவரத்தை விளக்கி வீண் வதந்தியை பரப்ப வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில், “திருப்பூர் மாநகரம் வேலம்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட திலகர் நகரில் உள்ள ரியா பேஷன்ஸ் என்ற கம்பெனியில் வேலை செய்யும் நபர், கடந்த 14-ம் தேதியன்று மாலை நேரத்தில் தேநீர் இடைவேளையின்போது அருகிலுள்ள கடைக்கு டீக்குடிக்க சென்றிருக்கிறார். அப்போது அங்கு அமர்ந்திருந்த 2. நபர்கள் சிகரெட் பிடிக்கும்போது புகை பட்டதில் அவர்களுக்குள் சிறிய பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இதில், மேற்கண்ட இருவரும் சேர்ந்து ரியா பேஷனில் வேலை செய்யும் நபரை தாக்க முற்பட்டுள்ளனர். எனவே, அந்த நபர் தனது கம்பெனியில் வேலை செய்யும் நண்பர்களை அழைத்துவந்திருக்கிறார். இதில், இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலைத்து சென்று விட்டனர். இரு தரப்பிற்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இது சம்பந்தமாக யாரும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இது தொழில் போட்டியோ, வேலைவாய்ப்பு சம்பந்தமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ ஏற்பட்ட பிரச்னை இல்லை. தற்செயலாக ஏற்பட்ட பிரச்னையே. எனினும், இது சம்பந்தமாக முழுமையாக விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே, சில தமிழர்கள் மது போதையில் புகை பிடித்து வட மாநில தொழிளாளர்கள் முகத்தில் விட்டும், தாக்குதலும் செய்ததால்தான் வட மாநில தொழிளாளர்கள் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர் என்று பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அங்கமுத்து தெரிவித்திருக்கிறார்.


Share it if you like it