உயிரினும்  மேலான கொடியை உயிர் பிரிந்த பின்பும் காத்த  திருப்பூர் குமரன்

உயிரினும் மேலான கொடியை உயிர் பிரிந்த பின்பும் காத்த திருப்பூர் குமரன்

Share it if you like it

இந்திய சுதந்திரம், எளிதில் கிடைக்கவில்லை. பலரின் போராட்டமும், தியாகமும் அடங்கியது. அதில், 27 வயதான இளைஞர் ஒருவர், தனது உயிர் பிரியும் நேரத்திலும், தன் தாய் நாட்டின் கொடியை, கீழே விழ விடாமல் பிடித்துக் கொண்டே இறந்த, அந்த இளைஞர், குமரன்.

அக்டோபர் 4, 1904 அன்று சென்னிமலை, ஈரோட்டில், ஒரு கைத்தறி நெசவு செய்யும் குடும்பத்தில் நாச்சிமுத்து முதலியார் மற்றும் கறுப்பாயிக்கு மகனாக பிறந்தார், குமரன். குடும்பத்தில் நெருக்கடியால், பள்ளிக் கல்வியை ஆரம்ப நிலையிலேயே விட்டு விட்டு, குடும்ப நெசவு தொழிலை மேற்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். அவர், தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு நூற்பாலையில் சேர்ந்து, பணியாற்றினார். 1923 ல், 19 வயதான குமரனின் திருமணம், 14 வயதான ராமாயி உடன் செய்து வைக்கப் பட்டன.

இளைஞர்களை, தேசத்தின் விடுதலையை நோக்கமாக கொண்டு, முன்வர ஊக்குவிப்பதில், குமரன் ஈடுபட்டார்.  “தேச பந்து இளைஞர் சங்கம்” என்ற சங்கத்தின் உறுப்பினராக இருந்த குமரன், பிற இளைஞர்கள் இணைந்து, பிரிட்டிஷர்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றார்கள்.

19 மார்ச், 1925 அன்று, காந்தி அடிகள் திருப்பூரில் பத்மாவதி இல்லத்தில் தங்கியிருந்தார். குமரன், மகாத்மாவை பார்க்க நேர்ந்தது. காந்தியின் உரையை கேட்டு, குமரனின் சுதந்திரத்தை பற்றியான புரிதலும், உணர்வும் அதிகரித்தது. இன்னும் தீவிரமாக, பாரத சுதந்திரத்திற்காக, குமரன் பாடு பாட தொடங்கினார்.

நாடு முழுவதும், சுதந்திரத்திற்கான இயக்கம் பெருகியிருந்த நேரம், அது. மகாத்மா காந்தியின் தேசத்துக்கான அழைப்பால் ஈர்க்கப்பட்ட இளம் குமரன், சுதந்திரப் போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டு, பாரத மாதாவை எப்படியாவது ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற துடிப்புடன், பல்வேறு விடுதலைக்கான நிகழ்ச்சிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார்.

சுதந்திர இயக்கங்களில் பங்கேற்று, தனது உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர்கள் வலியுறுத்திய போதிலும், அவர் பாரத தாய் தான் முக்கியம் என, சுதந்திரத்திற்காக போராட உறுதியாக இருந்தார்.

வேதாரண்ய சத்தியாகிரகத்தில் பங்கேற்க, குடும்பத்தினர்கள் தடை விதித்த போதிலும், அன்று முழுவதும் வீட்டில் இருந்தவாறு, உண்ணாவிரம் மேற்கொண்டார், குமாரசாமி.

1932 இல், காந்திஜியும் பல இந்தியத் தலைவர்களும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்ட போது, ​​இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடந்தன. ஆங்கிலேயர்களால் தடை செய்யப்பட்ட இந்திய தேசியக் கொடியை ஏந்தி, திருப்பூரிலும் அத்தகைய போராட்டம் நடத்தப் பட்டது. ஆங்கிலேயர்களை எதிர்த்து  சுதந்திரம் கோரி, மக்கள் தேசியக் கொடியுடன் பேரணி சென்றனர். பிரிட்டிஷ் சிப்பாய்கள் போராட்டக்காரர்களை அடித்து, பின்வாங்கச் செய்த போதிலும், குமரன் மற்றும் பலர் முன்னோக்கி சென்றார்கள்.

ராட்டின சக்கரத்தை மையம் கொண்ட மூவண்ணக் கொடியை, கையில் உறுதியாக பிடித்து கொண்டு, ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை  உரக்க சொல்லி, ஆங்கிலேய சிப்பாய்களுக்கு துளி கூட அஞ்சாமல், எந்த அடிக்கும் பயப்படாமல், பாரத தேசத்தை விடுவிக்க, ஒரே குறிக்கோளுடன், முன் வைத்த காலை பின் வைக்காமல் முன்னேறி சென்ற குமரனை, ஒரு சிப்பாய் தன் தடியால் தாக்கி, கொடியை பிடுங்க முயற்சித்தார். ஆனால், தேச பக்தி கொண்ட மனதும், நாடி நரம்பு, குமரனின் விரல்களுக்கு பலத்தை கொடுத்து, குமரனின் விரல்கள் கொடியை விட வில்லை. மீண்டும் மீண்டும் அடி வாங்கிய போதும், கொடியை விட்டு விட வில்லை. ஒரு கட்டத்தில், மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், குமரன் தரையில் விழுந்த போதிலும், கையில் ஏந்திய கொடியை, தரையில் விழ விட வில்லை. நொய்யல் ஆற்றின் கரையில் தேசத்தின் கொடியை காத்துக் கொண்டே குமரன், பலத்த காயத்துடன் கீழே விழுந்தார். எழுந்திருக்க கூட முடியாமல் காயத்துடன் கிடந்த அந்த தருவாயில் கூட, குமரன் என்ற பாரத புத்திரன், தன் தாய் நாட்டின் கௌரவமான கொடியை தரையில் விழ விடவில்லை.

தேசியக் கொடியை மண்ணில் விழ விடாமல், கையில் தாங்கிய வண்ணம், குமரன் விழுந்து கிடந்த காட்சி, பலரையும் வியக்க வைத்தது. ஒரு இளைஞனுக்கு, தேசத்தின் மீது இத்தனை பற்றா என்று, ஆச்சரியம் பட்ட மக்கள், தன்னுள்ளும் அந்த தேச உணர்வை கொண்டு வந்து, குமரன் காட்டிய அறப்போர் வழியிலே தொடர்ந்து சென்று, தேசத்துக்காக போராடினார்கள்.

ஜனவரி 11, 1932 அன்று அவரின், உயிர் பிரிந்தது. ‘கொடி’க்கு குமரன் காட்டிய மரியாதை, அவரது அளவற்ற தேச பக்தியை நிறுவித்தது. ​​இந்த தியாகிக்கு, ‘கொடி காத்த குமரன்’ என்ற பெயரை, வரலாறு கொடுத்தது. தேசிய கொடிக்கான முக்கியத்துவத்தை. குமரன் மூலம் பதிவு செய்தது. தடியை காத்த சுதந்திர போராட்ட தியாகியான குமரனை, நினைவு கூறி வணங்குவோம்.

  • Dr. M. விஜயா

Share it if you like it

One thought on “உயிரினும் மேலான கொடியை உயிர் பிரிந்த பின்பும் காத்த திருப்பூர் குமரன்

Comments are closed.