டி.ஆர்.பாலு எனக்கு கடன்காரன் என்று உண்மையை போட்டு உடைத்திருக்கிறார், தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின்.
பொதுவாக, தி.மு.க.வினர் எல்லோரையும் மிரட்டியும், உருட்டியும், ஏமாற்றியும் பிழைப்பு நடத்துபவர்கள் என்கிற குற்றச்சாட்டு தமிழகத்தில் நிலவி வருகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில், தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, நில அபகரிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறிவது வழக்கமாக இருந்து வருகிறது. தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், சமீபத்தில்கூட தி.மு.க. பிரமுகர்கள் பலர், பொதுமக்களின் நிலங்களை அபகரித்து சம்பவங்கள் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க, தி.மு.க.வினரை பொறுத்தவரை, மற்றவர்கள் யாரும் அவர்களை காட்டிக் கொடுக்க வேண்டியதில்லை. இதை பெருமை என்று கருதி அவர்களது கட்சிக்காரர்களே பேசி காட்டிக் கொடுத்து விடுவார்கள். அப்படித்தான் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தற்போது டி.எஸ்.பி.யாக இருக்கும் ஒருவர் இன்ஸ்பெக்டராக இருந்தபோது, தான் சொன்னபடியெல்லாம் எப்படி நடந்துகொள்வார் என்று கூறி உண்மையைப் போட்டு உடைத்து, அந்த நபரை அசிங்கப்படுத்தினார்.
அதேபோலதான், தி.மு.க. பொருளாளரும், மக்களவை எம்.பி.யுமான டி.ஆர்.பாலு ஒரு கடன்காரன் என்கிற உண்மையை போட்டு உடைத்திருக்கிறார் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். அதாவது, பாதை மாறா பயணம் என்கிற டி.ஆர்.பாலுவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டுப் பேசிய ஸ்டாலின், “அந்தக் காலத்தில் தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் என்னை பேச அழைப்பாளர்கள். அப்போதெல்லாம் டி.ஆர்.பாலுவைத்தான் உடன் அழைத்துச் செல்வேன். அப்போது, எனது வழிச்செலவுக்கு நிர்வாகிகள் பணம் கொடுப்பார்கள். அதில் பாதியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுப்பேன். அதை வாங்கிக் கொள்வார்.
அதேபோல, எனக்கு போடும் பட்டுபோன்ற சால்வைகளை டி.ஆர்.பாலு கேட்டு வாங்கிச் செல்வார். அடுத்த முறை பார்த்தால் அந்த சால்வையில் சட்டை தைத்து போட்டுக்கொண்டு வருவார். ஒருமுறை 5,000 ரூபாய்க்கு வண்டி வாங்கினேன். அந்த வண்டி விபத்தில் சிக்கி விட்டது. அதற்கு 7,000 ரூபாய் செலவு செய்தேன். எனினும், விபத்தில் சிக்கி விட்டதால் அந்த வண்டியை விற்க முடிவு செய்தேன். இதை கேள்விப்பட்ட டி.ஆர்.பாலு, தானே வண்டியை வாங்கிக் கொள்வதாக சொன்னார். உடனே, 100 ரூபாய் அட்வான்ஸும் கொடுத்தார். இப்படி சிறிது சிறிதாக 2,000 ரூபாய் வரை கொடுத்திருப்பார்கள். அவ்வளவுதான் அதன் பிறகு அதை மறந்து விட்டார். ஆக, இன்றுவரை பாலு எனக்கு கடன்காரன்தான்” என்று சொல்ல, பாலுவோ அசடு வழிந்தபடி சிரித்து சமாளித்துக் கொண்டிருந்தார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்து விட்டு பலரும் டி.ஆர்.பாலுவின் மானத்தை பொது மேடையில் ஸ்டாலின் வாங்கி விட்டதாக கிண்டலடித்து வருகிறார்கள். சிலரோ, அவ்வளவு ஏழ்மையில் இருந்த டி.ஆர்.பாலுவுக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் பலரோ இதுதான் திராவிட மாடலோ என்று கேலி செய்து வருகிறார்கள். ஆக, நெட்டிசன்களுக்கு நல்ல கன்டென்ட் கிடைத்து விட்டது.