திருச்சி கத்தோலிக்க ஆலயத்தில் தீண்டாமை பாகுபாடு காட்டுவதாக தலித் கிறிஸ்தவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
ஹிந்துக்களாக இருப்பவர்கள் கிறிஸ்தவர்களாகவோ அல்லது இஸ்லாமியர்களாகவோ மதம் மாறிவிட்டால், ஜாதி பாகுபாடு இருக்காது. அனைவருமே கிறஸ்தவ மற்றும் முஸ்லீம்களாகி விடுவார்கள் என்று இரு மதத்தினரும் கூறிவருகிறார்கள். மேலும், பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்து மதம் மாற்றுவதும் தொடர்கதையாக இருக்கிறது. ஜாதி இல்லை என்பதை நம்பி அப்பாவி ஏழை மக்களும் மதம் மாறுவார்கள். ஆனால், மதம் மாறிய பிறகுதான் அங்கும் ஜாதி பாகுபாடு இருப்பது தெரியும். ஆம், ஹிந்துவாக எந்த ஜாதியில் இருந்து கிறிஸ்தவராக மதம் மாறுகிறார்களோ, அதே ஜாதிதான் அவர்களுக்கு கடைசிவரை நீடிக்கிறது. இதே நிலைதான் முஸ்லீம்களிலும்.
உதாரணமாக, ஹிந்து வன்னியர் கிறிஸ்தவராக மாறினால், வன்னிய கிறிஸ்தவர். ஹிந்து உடையார் கிறிஸ்தவராக மாறினால், கிறிஸ்தவ உடையார். அதேபோல, ஹிந்து தலித் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால், அங்கும் தலித் கிறிஸ்தவர்தான். இவர்களுக்கென்று தனி கோயில், தனி ஏரியா என எல்லாமே தனிதான். இவர்களது குடும்பத்தில் வன்னிய கிறிஸ்தவர்கள், உடையார்கள் மற்றும் உயர் ஜாதி கிறிஸ்தவர்கள் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள். இதே நிலைதான் முஸ்லீம்களிலும். இடிந்தகரையில் மதம் மாறிய தலித் ஹிந்துக்கள், இதுவரை அப்பகுதி முஸ்லீம்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான், கிறிஸ்தவ மதத்தில் ஜாதி பாகுபாடு இருக்கிறது என்பதை திருச்சி சம்பவமும் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அய்யம்பட்டி கிராமத்தில்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், “கடந்த ஜூலை மாதம் புனித மதலேன் மரியாள் ஆலய தேர் திருவிழா நடந்தது. அப்போது, கத்தோலிக்க தலித் கிறிஸ்தவராகிய நாங்கள் வரி கொடுப்பதற்காக அய்யம்பட்டி பங்குத் தந்தையிடம் முறையிட்டோம். அவரும் ஏற்றுக்கொண்டார். ஆனால், கிராம முக்கியஸ்தர்கள் சிலர் எங்களிடம் வரி வாங்க எதிர்ப்பு தெரிவித்து, பங்குத்தந்தையை மிரட்டியதுடன், இனி இந்த பங்குக்கு திருப்பலி செய்ய வரக்கூடாது என்று கூறி அனுப்பி விட்டனர்.
மேலும், திருவிழாவின்போது சிலையை தூக்கி தேரில் வைக்கவும், தேரை வடம் பிடித்து இழுக்கவும், எங்கள் தெருவுக்கு தேர் வரவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயரிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து வாடிகன், இந்திய மற்றும் தமிழக ஆயர் பேரவை, மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறோம்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.