திருச்சியில் நடந்த ஒரு சம்பவம், தி.மு.க. அரசு பெண்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கும் லட்சணம் இதுதானா என்று கேள்வி எழுப்ப வைத்திருக்கிறது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வ.உ.சி. சாலையைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சீதாலட்சுமி. 53 வயதாகும் இவர், திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இ.சி.இ. துறையின் தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த 12-ம் தேதி காலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக சாலையிலுள்ள ஒரு தனியார் பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்ற இவர், வாகனத்தை நிறுத்திவிட்டு நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது, மைதானத்தில் யாருமே இல்லை. இதை நோட்டம்விட்ட ஒரு கொள்ளையன், உருட்டுக் கட்டையை எடுத்து வந்து சீதாலட்சுமியின் தலையில் தாக்கி இருக்கிறான். இதில், மயங்கிச் சரிந்த சீதாலட்சுமியை தரதரவென இழுத்துச் சென்று ஒரு இடத்தில் போட்டுவிட்டு, அவரது செல்போனையும், ஸ்கூட்டரையும் திருடிக் கொண்டு சென்றுவிட்டான். இதை தூரத்திலிருந்து வீடியோ எடுத்த நபர் ஒருவர், வீடியோ ஆதாரத்துடன் திருச்சி கன்டோன்மென்ட் போலீஸில் புகார் செய்தார்.
இதையடுத்து, விரைந்து வந்த போலீஸார், சீதாலட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தப்பியோடிய கொள்ளையனை பிடிக்க விரட்டிச் சென்றனர். போலீஸ் வருவதைக் கண்ட கொள்ளையன், அதி வேகமாக ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றான். இதில், தாறுமாறாக ஓடிய ஸ்கூட்டர் தடுப்புக் கட்டை மீது மோதி கீழே விழுந்தான். பின்னர், போலீஸார் அவனை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், திருச்சி கீழக்கடை பஜாரில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
மேலும், போதைப் பழக்கத்துக்கு அடிமையான அவன், பணத்துக்காக பேராசிரியையை தாக்கி செல்போன், ஸ்கூட்டரை பறித்துச் சென்றது தெரியவந்தது. கடந்த 12-ம் நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும் பெண்களுக்கு பாதுகாப்பான அரசு தி.மு.க.தான் என்று அக்கட்சியினரும், முதல்வரும், அமைச்சர்களும் கூறிவருகின்றனர். ஆனால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான் உண்மை. அதை இச்சம்பவம் நிரூபித்திருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.