தண்டவாளத்தில் லாரி டயர்: ரயிலை கவிழ்க்க சதியா?

தண்டவாளத்தில் லாரி டயர்: ரயிலை கவிழ்க்க சதியா?

Share it if you like it

திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயர் வைக்கப்பட்ட விவகாரம், ரயிலை கவிழ்க்க நடந்த சதியா என்பது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒடிஸாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இவ்விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த விபத்துக்கு சதிச் செயல்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 1-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கன்னியாகுமரி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில், திருச்சி லால்குடி அருகே மேல வாளாடி மேம்பாலம் பகுதியில் சென்றபோது, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த லாரி டயர் மீது மோதியது.

இதன் காரணமாக, ரயிலின் முதல் 4 பெட்டிகளில் மின்சராம் துண்டிக்கப்பட்டது. இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருச்சி ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், திருச்சியிலிருந்து வந்த ரயில்வே ஊழியர்கள் ரயில் ஏற்பட்ட மின் இணைப்பு பழுதை சரி செய்தனர். இதன் பிறகு, 1 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே பாதுகாப்புப் படையினரும், போலீஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலவாளாடி பழைய ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆகவே, ரயில் தண்டவாளத்தில் லாரி டயரை வைத்த விவகாரத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்குமா? அல்லது ரயிலை கவிழ்க்க நடந்த தீவிரவாத சதிச் செயலா? என்கிற சந்தேகம் நிலவி வருகிறது. திருச்சி எஸ்.பி. சுஜித்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், சந்தேகத்தின்பேரில் 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Share it if you like it