திருச்சி ஸ்ரீரங்கம் சித்திரைத் தேர் திருவிழாவில், பக்தர்கள் கொளுத்திய சூடத்தை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர், தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்த சம்பவம், பக்தர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்திருக்கிறது அரங்கநாத சுவாமி கோயில். இக்கோயிலில் மொத்தம் 21 கோபுரங்கள் இருக்கின்றன. இவற்றில் கோயிலின் ராஜகோபுரம் 239.501 அடி உயரம் கொண்டது. இதுதான் ஆசியாவிலேயே மிக உயரமான கோபுரமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வார்கள்.
அந்த வகையில், நிகழாண்டு சித்திரை தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதையொட்டி, பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். திருவிழாவில் தேர் புறப்பட்ட பிறகு, பக்தர்கள் சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு பக்தர்கள் தேங்காய் உடைப்பதற்கும், சூடம் ஏற்றுவதற்கும் போலீஸார் அனுமதி தரவில்லை. எனினும், அங்கிருந்த மக்கள் வழக்கமாபோல தேங்காய் உடைத்தும், சூடம் ஏற்றியும் வழிபட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் ஒருவர், பக்தர்கள் ஏற்றிய சூடத்தை தனது பூட்ஸ் காலால் மிதித்து அணைத்தார். இதைக் கண்ட பக்தர்கள் கடும் ஆவேசம் அடைந்தனர். எனினும், போலீஸாருக்கு பயந்து தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி விட்டுச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது ஹிந்துக்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.