‘வச்ச குறி தப்பாது’: 6 பதக்கம் அள்ளிய ‘தல’ அஜித்!

‘வச்ச குறி தப்பாது’: 6 பதக்கம் அள்ளிய ‘தல’ அஜித்!

Share it if you like it

திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித்குமார் 4 தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருக்கிறார்.

மாநில அளவிலான 47-வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி கே.கே.நகரிலுள்ள ஆயுதப்படை போலீஸ் வளாகத்தில் அமைந்திருக்கும் திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வருகிறது. கடந்த 24-ம் தேதி தொடங்கிய இப்போட்டி நாளை நிறைவடைகிறது. இப்போட்டி, சிறியவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என தரம் பிரிக்கப்பட்டு, சப் யூத் (16 வயது வரை), யூத் (19 வயது வரை), ஜூனியர் (21 வயது வரை), சீனியர் (21 முதல் 45 வயது வரை), மாஸ்டர் (45 முதல் 60 வயது வரை), சீனியர் மாஸ்டர் (60 வயதுக்கு மேல்) என தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற 1,300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில், கடந்த 27-ம் தேதி நடந்த மாஸ்டர் பிரிவில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். இதில், 10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய 3 பிஸ்டல் பிரிவு சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்ட அஜித்குமார், அன்றிரவே சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதையடுத்து, மாநில துப்பாக்கி சுடும் போட்டி பிஸ்டல் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. ஓய்வுபெற்ற டி.ஜி.பி. தேவாரம் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். இதில், மொத்தம் 162 பேர் பதக்கங்களை வென்றனர். இதில்தான், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி (ஐ.எஸ்.எஸ்.எப்) பிரிவில் தங்க பதக்கமும், 50 மீட்டர் பிரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கமும் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை நடிகர் அஜித்குமார் வென்றிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, ரைபிள் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பரிசளிப்பு விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில், வெற்றி பெற்றவர்கள் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்று திருச்சி காவல்துறை தெரிவித்திருக்கிறது.


Share it if you like it