T.T.சங்கரதாஸ்சுவாமிகள்

T.T.சங்கரதாஸ்சுவாமிகள்

Share it if you like it

T.T.சங்கரதாஸ்சுவாமிகள்

(பாரம்பரிய கலைக்கும் தமிழ் திரையரங்கிற்கும் பாலத்தை உருவாக்கினார்)

T.T. சங்கரதாஸ் சுவாமிகள் ஒரு புகழ்பெற்ற நாடக ஆசிரியராகவும், இயக்குநராகவும், நிர்வாகியாகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். அவர் பாரம்பரிய கலைக்கும், தமிழ் திரையரங்கிற்கும் ஒரு பாலத்தை உருவாக்கினார். T.T. சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் உற்சாகமூட்டக் கூடிய நாடகக் கலை பயிற்சி, இலங்கை ஜாஃப்னா வரை சென்றடைந்தது. 1900 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க, அங்கு அவர் சென்றார்.

சங்கரதாஸ் சுவாமிகள், 1867 ஆம் ஆண்டு, தூத்துக்குடியில் உள்ள துறைமுக நகரத்தில், தாமோதரன் பிள்ளை மற்றும் காந்திமதி அம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவரது தந்தை தாமோதரன் பிள்ளை அவர்கள், புகழ் பெற்ற தமிழறிஞர் ஆவார். ராமயனத்தை நன்கு கற்றுத் தேர்ந்தவர். ராமாயன காவியத்தில் பெற்ற புலமையால், அவர் “ராமாயனப் புலவர்”  என்று அழைக்கப்பட்டார். சங்கரதாஸ் சுவாமிகள் தனது ஆரம்ப கால தமிழ் கல்வியை, தனது தந்தையிடம் இருந்து பெற்றார். பிறகு அவர், அக்கால கட்டத்தில் புகழ்பெற்ற தமிழறிஞரான பழனி தண்டாயுதபாணி சுவாமிகளிடம் தமிழ் பயின்றார். சங்கரதாஸ் சுவாமிகள் தண்டாயுதபாணி சுவாமிகளிடம் பயின்ற போது, அவருடன் உடுமலை சரபம் முத்துசுவாமி கவிராயர் அவர்களும் பயின்றார். அவர் பிற்காலத்தில் பழம்பெரும் தமிழறிஞராக அறியப்பட்டார்.

சங்கரதாஸ் சுவாமிகள் சில காலம் ஒரு உப்பு தொழிற்சாலையில், கணக்காளராக பணியாற்றினார். தனது பதினாறாவது வயதிலேயே, வெண்பாக்கள் மற்றும் பாடல்களை உருவாக்கத் தொடங்கியவர், தான் செய்து வந்த கணக்காளர் பணி, தனது தமிழ் ஆராய்ச்சிக்கு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்தார். எனவே தனது இருபத்து நான்காம் வயதில், தனது கணக்காளர் பணியை ராஜினாமா செய்தார். அதுவே அவர் பிற்காலத்தில் தமிழ் நாடக மேடையில் சிறந்த குருவாகவும், தனது அடுத்த தலைமுறை மேடை கலைஞர்கள் அவருக்கு நன்றிக் கடன் பெற வித்திட்டது. முதன் முதலாக சங்கரதாஸ் சுவாமிகளின் இலக்கிய ஆற்றலை அங்கீகரித்தவர்கள் ராமுடு ஐயர் மற்றும் கல்யாணராம ஐயர் ஆவர். அவர்கள் இருவரும் அக்காலத்தில் பிரபல நாடக கம்பெனி ஒன்றை நடத்தி வந்தனர். சுவாமிகள் அந்த நாடக கம்பெனியில் முதலில் நடிகராக சேர்ந்தார். பின்னர் எழுத்தாளராகவும் உயர்ந்தார். அவர் நடிகராக இரணியன், ராவணன், வர்ணா மற்றும் சனீஸ்வரன் ஆகிய கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து புகழ்பெற்று விளங்கினார். பின்னர் அவர் சாமி நாயுடு நாடக கம்பெனியில் சேர்ந்தார். அங்கு அந்த கம்பெனியின் பல நாடகங்களில் சூத்திரதாரி கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். அவருடைய தனித்துவமான சூத்திரதாரி வேடம் பெருந்திரளான மக்கள் ஈர்த்தது. சங்கரதாஸ் சுவாமிகள் சாமி நாயுடு அவர்களுடன் இருந்த காலத்தில் தனது வாழ்வில் ஒருவித அதிருப்தியை உணர்ந்தார். இதன் காரணமாகவே சாமி நாயுடு அவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சங்கரதாஸ், காவி உடை அணிந்து, பல முருகன் சன்னதிகளுக்கு, யாத்திரை சென்றார். அதன்பிறகு அவ,ர் “சங்கரதாஸ் சுவாமிகள்” என்று அறியப்பட்டார்.

அடுத்ததாக, புகழ்பெற்ற கஞ்சிரா வாத்தியக்காரர் மான்பூண்டியா பிள்ளை அவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, அவரது வாழ்வில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். தனது யாத்திரையை முடித்த அவர், சில ஆண்டுகள் மான்பூண்டியா பிள்ளையுடன் வசித்து வந்தார். மான்பூண்டியா பிள்ளை சங்கரதாஸ் சுவாமிகளை தனது தத்து பிள்ளையாக கருதினார். சங்கரதாஸ் சுவாமிகளின் தமிழ் இலக்கணம் மீதுள்ள ஆற்றலும், சிறந்த புலமையும் அவரை பெரிதும் கவர்ந்தது. மான்பூண்டியா பிள்ளை சுவாமிகளின் நட்பை பெரிதும் நேசித்தார். மான்பூண்டியா பிள்ளையின் கஞ்சிரா வாசிப்பில் சுவாமிகளின் பாடல்கள் பல நிகழ்ச்சிகளில் அரங்கேறியது. பிரபல மிருதங்க வித்வான்களான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை மற்றும் பழனி முத்தையா பிள்ளை ஆகியோர், மான்பூண்டியா பிள்ளையின் மாணவர்களாக, அக்காலத்தில் பயிற்சி பெற்று வந்தனர்.

மான்பூண்டியா பிள்ளை அவர்கள் வலியுறுத்தியதன் காரணமாக, சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் மேடை நாடக எழுத்தாளராக, மீண்டும் உருவெடுத்தார். அடுத்த சில நாட்களிலேயே, பல நாடக கம்பெனிகளில் எழுத்தாளராக பணியாற்றினார். அவற்றுள் வள்ளி வைத்தியநாத ஐயர், அல்லி பரமேஸ்வர ஐயர் மற்றும் P.S.வேலு நாயர் ஆகியோரால் நடத்தப்பட்டு வந்த நாடக கம்பெனியான சண்முகாநந்தா சபா குறிப்பிடத்தக்கதாகும்.
P.S.வேலு நாயரின் நாடக கம்பெனியில் அவர் பணியாற்றிய போது, பம்மல் சம்பந்த முதலியாரின் மனோஹரா நாடகத்திற்கு அவர் எழுதிய பாடல், காலத்தால் அழியாததாக திகழ்கிறது. பழம்பெரும் கலைஞர்களான TKS சகோதரர்களின் தந்தையான T.S.கண்ணுசாமி பிள்ளை அவர்கள் சண்முகாநந்தா சபாவில், சங்கரதாஸ் சுவாமிகளுடன் முதன்முதலில் அறிமுகமானார்.

பல நாடக குழுக்களில் பணியாற்றி, C கண்ணைய்யா, C.S.சாமண்ணா ஐயர், பாலாம்பாள் மற்றும் கும்பகோணம் பாலாமணி  போன்ற எண்ணற்ற பல கலைஞர்களை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள், 1910 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க நாடக சபா என்ற நாடக குழுவை சொந்தமாக துவங்கினார். பழம்பெரும் நடிகரான S.G.கிட்டப்பா அவர்களும், இதே நாடக கம்பெனியில் தான், நடிப்பு திறமையை பெற்றார். அந்த காலகட்டத்தில் தான், “Boys company” என்ற பயிற்சி முறை, மெதுவாக பிரபலமடைந்து வந்தது. பாய்ஸ் கம்பெனி, குருக்குல கல்வி முறையை பின்பற்றியது. அதாவது சிறுவர்கள் தங்களது ஆசிரியருடனே தங்கி, கல்வி கற்று வந்தனர். தமிழ் திரையரங்குகளின் பல்வேறு அம்சங்கள் மட்டுமன்றி, நிர்வாகம் சம்மந்தப்பட்ட கணக்கு வைத்தல், கடைகளை பராமரித்தல் போன்ற அம்சங்களையும் கற்பிக்கப்பட்டது.

முதல் பாய்ஸ் கம்பெனியான ஜகன்நாத ஐயரின் பால மீனா ரஞ்சனி சங்கீத சபாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பிற்காலத்தில், திரையுலகில் ஜாம்பவான்களாக திகழ்ந்த நவாப் T.S.ராஜமாணிக்கம், M.R.ராதா, S.V.வெங்கட்ராமன் மற்றும் K.சாரங்கபாணி உள்ளிட்டோர், அந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் தான். சங்கரதாஸ் சுவாமிகள், தனது கலை வாழ்க்கையில், பல சிறந்த கலைஞர்களை உருவாக்கியதன் மூலம், தனித்துவம் பெற்று விளங்கினார். ஆனால் ஜகன்நாத ஐயருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த நாடக கம்பெனியில் அவருடைய பங்கு சில ஆண்டுகளே நீடித்தது.

1918 ஆம் ஆண்டு, சுவாமிகள் தனது நண்பர்களுடன் சேர்ந்து, சொந்தமாக தத்வ மீனலோசினி வித்வத் பால சபா என்ற பாய்ஸ் கம்பெனியை துவங்கினார். அங்கே P.S.வேலு நாயரின் கம்பெனியில் சுவாமிகளை முதன் முதலில் சந்தித்த T.S.கண்ணூசாமி பிள்ளை, தனது மூன்று மகன்களான T.K.சங்கரன், T.K.முத்துசுவாமி மற்றும் T.K.சண்முகம் ஆகியோரை சுவாமிகளிடம் பயிற்சி பெற அனுப்பினார். T.K.சண்முகம் தனது நினைவுக் குறிப்பில் தத்வ மீனலோசினி வித்வத் பால சபாவில் நடந்த சுவாரசியமிக்க விஷயங்களையும், சுவாமிகளிடம் கிடைத்த அனுபவத்தையும் எழுதி உள்ளார். டி.கே.எஸ் சகோதரர்கள் மூவரில் சண்முகம் அவர்கள் சங்கரதாஸ் சுவாமிகளின் மிகுந்த அன்பிற்குரியவராக இருந்தார். சண்முகம் தனது “அபிமன்யு சுந்தரி” நாடகத்தை சுவாமிகளை கதாநாயகனாக மனதில் வைத்தே எழுதினார். அந்த நாடகத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நான்கு மணிநேரம் ஓடக் கூடிய அந்த நாடகம் ஒரே இரவில் எழுதி முடிக்கப் பட்டது. மேலும் சுவாமிகள் நல்ல ஒழுக்கத்தை பின்பற்றுபவர் என்றும் கலைஞர்கள் பாக்கு, புகை இலை, பீடி போன்றவற்றை உட்கொள்வதை கடுமையாக எதிர்ப்பவர் என்றும் சண்முகம் கூறி உள்ளார். நடத்தை விதிகளை மீறும் கலைஞர்கள் சுவாமிகளால் தண்டிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். TT சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் உற்சாகமூட்டக்கூடிய நாடகக் கலை பயிற்சி இலங்கை ஜாஃப்னா வரை சென்றடைந்தது. 1900 ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அங்கு அவர் சென்றார்.

1921 ஆம் ஆண்டு நாடகக் குழு மெட்ராஸுக்கு நாடக நிகழ்ச்சிக்காக சுற்றுப்பயணம் சென்றிருந்த போது சுவாமிகள் நோய் வாய்ப்பட்டார். இருப்பினும் சுற்றுப்பயணம் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்பட்டது. ஒருநாள் மெட்ராஸ் ஜார்ஜ் டவுனில் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கில் (இன்று முருகன் டாக்கீஸ் என்று அழைக்கபடுகிறது) நாடக நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஒரு தந்தி வந்திருந்தது. அந்த தந்தியில், சாமிகளுக்கு வலிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக வலது கையும், இடது காலும் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. நாடகக் குழுவினர் அனைவரும் அந்த செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளாகினர். சபா உரிமையாளர்களுள் ஒருவரான பழனியா பிள்ளை உடனடியாக தூத்துக்குடிக்கு விரைந்தார். சங்கரதாஸ் சுவாமிகளுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்கி நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மெட்ராஸ் அழைத்து சென்றார் பழனியா பிள்ளை. இருப்பினும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. சுவாமிகளால் படுக்கையில் இருந்து எழும்ப முடியவில்லை.

சுவாமிகள் தனது நோயையும் பொருட்படுத்தாமல், நாடக நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். திரையின் அருகில் மூங்கில் நாற்காலியில் அமர்ந்த படியே நிகழ்ச்சிகளை பார்த்தார். அவரால் பேச முடியாத போதிலும், அவரது மூளை திறனும் நினைவாற்றலும் குறையவில்லை. மேடையில் நடித்து கொண்டிருக்கும் கலைஞர்கள், தங்களது வசனத்தை மறக்கும் போது, தனது செய்கையின் மூலம், அவர்களுக்கு நினைவூட்டுவார். 1922 ஆம் ஆண்டு, சங்கரதாஸ் சுவாமிகளின் உடல் நிலை மிகவும் மோசமானது. பாண்டிச்சேரியில் தனது வாழ்வின், கடைசி சில ஆண்டுகளை கழித்து வந்த சங்கரதாஸ் சுவாமிகள், நவம்பர் 13, 1922 அன்று இயற்கை எய்தினார். அவர் இறந்த பல ஆண்டுகளுக்கு பிறகு, டி.கே.சண்முகம் அவர்களின் பெருமுயற்சியால், பாண்டிச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவகம் அமைக்கப் பட்டது. அவருடைய நினைவகத்தில் அவருடைய நினைவு நாள் அன்று, பல மேடை கலைஞர்கள் மற்றும் தென்னிந்திய கலைஞர்கள் சங்க உறுப்பினர் வந்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தென்னிந்திய கலைஞர்கள் சங்கத்தில் உள்ள அரங்கத்திற்கு, நாடகத்துறையின் பழங்கால புகழ்பெற்ற கலைஞர்களை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் அவர்களின் பெயர் சூட்டப் பட்டது.

சரவணக் குமார்


Share it if you like it

One thought on “T.T.சங்கரதாஸ்சுவாமிகள்

Comments are closed.