நிதியமைச்சரின் ‘நூல்’ விமர்சனம்: குவியும் கண்டனம்!

நிதியமைச்சரின் ‘நூல்’ விமர்சனம்: குவியும் கண்டனம்!

Share it if you like it

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் ‘நூல்’ விமர்சனம் கடும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

தி.மு.க.வினரை பொறுத்தவரை, அக்கட்சியின் தலைவர்களை யாராவது விமர்சனம் செய்துவிட்டால், அவர்கள் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களது பின்னணி என்ன? என்றெல்லாம் ஆராய்ந்து, அதை வைத்து அவர்களை வசைபாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், தமிழக நிதியமைச்சராக இருக்கும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இதுபோன்ற விஷத்தைக் கக்குவதில் வல்லவர். குறிப்பாக, பெண் பத்திரிகையாளரை குறிவைத்து தாக்கி வருகிறார். உதாரணமாக, சமீபகாலமாகவே ஹிந்துக் கோயில்களை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஹிந்து அமைப்புகளிடமே ஒப்படைக்க வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.

இதுதொடர்பாக பேசிய, சத்குரு ஜக்கி வாசுதேவ், ஹிந்து கோயில்களை ஹிந்துக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு சத்குருவை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து பேட்டி அளித்தார் பழனிவேல் தியாகராஜன். ஆகவே, ஈஷா அறக்கட்டளையினரிடம் பதில் கட்டுரையை வாங்கி, தி இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தார் அக்குழுமத்தின் தலைவர் மாலினி பார்த்தசாரதி. உடனே, மாலினி பார்த்தசாரதிக்கு ‘கவுன்சிலிங்’ தேவை என்று கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்திருந்தார் பழனிவேல் தியாகராஜன்.

இதேபோல, பழனிவேல் தியாகராஜன் தி.மு.க. ஐ.டி. பிரிவுத் தலைவராக இருந்தபோது, ​​பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சில தகவல்களை அம்பலப்படுத்தினார், ராம்நாத் கோயங்கா விருது பெற்ற பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர். இவரையும் கடுமையான வார்த்தைகளால் இழிவுபடுத்தி பேசினார் பழனிவேல் தியாகராஜன். மேலும், கோவாவில் நடந்த 43-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொள்ளவில்லை. இது தொடர்பாக, கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், சில கருத்துகளை தெரிவித்திருந்தார். உடனே, வானதி மீதும் பழனிவேல் தியாகராஜன் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டார்.

இந்த சூழலில், தற்போது மீண்டும் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது ஜாதி ரீதியான வன்மத்தை கக்கி இருக்கிறார். நிதி மற்றும் வணிகச் செய்தி இணையதளமான மனிகண்ட்ரோலின் ஆசிரியரான சந்திரா ஆர் ஸ்ரீகாந்த், மே 25 ட்வீட் ஒன்றை வெளியிட்டார். அதில், “சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பரை சந்தித்தேன். உயர்மட்ட தலைவரின் மருமகன் ஒருவரால் சில மெகா நில அபகரிப்பு நடக்கிறது. இந்தப் பையனுக்கு விற்காவிட்டால், சென்னையில் 5 கோடி ரூபாய்க்கு மேல் எந்த நிலத்தையும் விற்க முடியாது. இன்னும் நிறைய விஷயங்கள் மாறும்..”. என்று தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்திருந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பெண் பத்திரிகையாளரின் ஜாதி அடையாளத்தைக் கூறி துஷ்பிரயோகம் செய்திருக்கிறார். அதாவது, அவரது ட்வீட்டை ‘தர்க்கமற்ற வதந்தி பரப்புதல்’ என்று குறிப்பிட்டவர், அவரது ட்வீட் ‘மறைமுக ஏஜெண்டுகளுக்கு, குறிப்பாக சில (நூல்கண்டு படத்தை போட்டு இல்க்) நபர்களுக்கு வழக்கமான கூலி வேலை’ என்று கூறியிருந்தார். பழனிவேல் தியாகராஜனின் ட்வீட்டில் உள்ள இந்த ‘நூல் இல்க்’ பிராமணர்களைப் பற்றிய இழிவான குறிப்பு என்கிறார்கள் சமூக வலைத்தள பயனாளிகள். இதற்கு, பழனிவேல் தியாகராஜனுக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். புகழ்பெற்ற குடும்பத்தில் இருந்து வந்தவர், படித்துவிட்டு வெளிநாட்டில் பணிபுரிந்தவர் என்று அடிக்கடி பெருமை பீற்றிக்கொள்ளும் பழனிவேல் தியாகராஜன், இவ்வளவு கீழ்த்தரமான பதிவுகளை போடுகிறாரே என்று விமர்சிக்கிறார்கள்.


Share it if you like it