பாலினம், மத பேதமில்லாத அனைவருக்குமான பொதுவான விவாகரத்து சட்டத்தை இயற்ற உத்தரவிடக் கோரி, இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமியின் மனைவி ஹாசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவரது மனைவி ஹாசின் ஜகான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். மேலும், முகமது ஷமி மீது பாலியல் உட்பட பல்வேறு புகார்களை ஹாசின் ஜகான் கூறி வருகிறார். அதோடு, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஹாசின் ஜகான் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில், “முஸ்லீம் தனிநபர் சட்டத்தின் கீழ், மிகக் கொடூரமான விவாகரத்து முறையால் பாதிக்கப்பட்டுள்ளேன். முஸ்லீம் பெண்ணின் கருத்தை கேட்காமல், அவர்களது தரப்பு நியாயத்தை தெரிவிக்க வாய்ப்புத் தராமல், தன்னிச்சையாக ஆண்களால் விவாகரத்து செய்ய முடியும். ‘தலாக்’ நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டு விட்டாலும், இது பல வடிவங்களில் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த முறைகள் சட்ட விரோதமானவை என்று அறிவிக்க வேண்டும். மேலும், அரசியல் சாசனம் அளித்துள்ள சம உரிமையை உறுதி செய்யும் வகையில், பாலினம் மற்றும் மத பேதமில்லாமல் அனைவருக்கும் பொதுவான விவாகரத்து சட்டத்தை உருவாக்க உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இம்மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான மற்ற வழக்குகளுடன் இணைத்து இதை விசாரிப்பதாக நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருக்கிறது.