மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அவதுாறு பதிவுகளை, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியின் எம்.பி.யும், மத்திய அமைச்சருமாக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஸ்மிருதி இராணி. இவர், காங்கிரஸ் தலைவர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களைவில் முன்வைத்து வருகிறார். குறிப்பாக, சோனியாவும், ராகுல் காந்தியும் 5,000 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக குற்றம்சாட்டினார். மேலும், அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர். எனவே, காங்கிரஸ் தலைவர்கள், ஸ்மிருதி இராணி மீது கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.
இந்த சூழலில், கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா மற்றும் நேட்டா டிசோஸா ஆகியோர், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷி இராணி, கோவாவில் அனுமதியின்றி மதுபானக் கூடம் நடத்துவதாக குற்றம்சாட்டினர். ஆகவே, ஸ்மிருதி இராணியை பதவியில் இருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, தன் மீது பொய் புகார் பரப்பிய காங்கிரஸ் தலைவர்கள் மீது, 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி அவதுாறு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு அவர்கள் பதிலளிக்காததைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவதுாறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட மூவர் தெரிவித்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று ஸ்மிருதி இராணி தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்ணா, வழக்குத் தொடர்ந்தவரின் மீதான அவதூறு குற்றச்சாட்டின் உண்மை நிலை ஆராயப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது. இந்த ட்வீட்களால் அவரது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, 3 பேரும் செய்தியாளர் சந்திப்பின்போது ஸ்மிருதி இராணி மற்றும் அவரது மகள் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பான ட்விட்டர், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள பதிவுகளையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் தலைவர்களின் மூக்கு உடைபட்டிருக்கிறது.