8 வயது சிறுமி பலாத்காரம், கொலை: ஃபரூக்குக்கு மரண தண்டனை!

8 வயது சிறுமி பலாத்காரம், கொலை: ஃபரூக்குக்கு மரண தண்டனை!

Share it if you like it

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி ஃபரூக்குக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் 30 நாட்கள் அவகாசம் அளித்திருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் சதர் கோட்வாலி பகுதியிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஃபரூக். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி, அச்சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, ஃபரூக் சாக்லேட் தருவதாக அச்சிறுமியிடம் நைசாகப் பேசி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர், அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஃபரூக், விஷயம் வெளியில் தெரிந்து விடுமோ என்று அஞ்சி, அச்சிறுமியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

இதனிடையே, வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நீண்ட நேரமாகக் காணததால், அக்குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனால் பதட்டமடைந்த பெற்றோர், அச்சிறுமியுடன் ஒன்றாக விளையாடிய மற்ற குழந்தைகளிடம் விசாரித்திருக்கிறார்கள். அதற்கு, அக்குழந்தைகள் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஃபாரூக் அழைத்துச் சென்றதாகக் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து, அச்சிறுமியின் பெற்றோரும், உறவினர்களும் ஃபாரூக்கை தேட ஆரம்பித்தனர். அப்போது, ஃபரூக் சைக்கிளில் வைத்து ஒரு சாக்கு மூட்டையை எடுத்துக் கொண்டு கிராமத்தை விட்டு வெளியே சென்றிருக்கிறான்.

இதையறிந்த ஊர் மக்கள், விரட்டிச் சென்று ஃபரூக்கை பிடித்தனர். அந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்ததில் உள்ளே சிறுமியின் சடலம் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், ஃபரூக்கை சரமாரியாகத் தாக்கினர். மேலும், இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிராம மக்கள் ஃபரூக்கை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்திருந்த ஃபரூக்கை மாவட்ட மருத்துவமனையில் சேர்த்த போலீஸார், உடல்நிலை சீரானதும் சிறையில் அடைத்தனர். இதன் பிறகு, நடந்த வழக்கு விசாரணையில் ஃபரூக் குற்றவாளி என்பது நிரூபணமானது.

இந்த நிலையில்தான், அரசு உதவி வழக்கறிஞர் தர்மேந்திர உத்தம் மற்றும் வழக்கறிஞர் ராஜேஷ் யாதவ் ஆகியோர் நீதிமன்றத்தில் 14 சாட்சிகள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை சமர்ப்பித்தனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி முகமது அகமது கான், குற்றவாளி ஃபரூக்கிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், அத்தீர்ப்பில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றம் உறுதி செய்த பின்னரே, தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். அதோடு, இந்த உத்தரவை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் 30 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். அவருக்கு இலவச வழக்கறிஞர் வசதியும் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it