இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லீம் பல்கலை. அதிரடி நடவடிக்கை!

இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு தடை: அலிகர் முஸ்லீம் பல்கலை. அதிரடி நடவடிக்கை!

Share it if you like it

மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகிய இரு இஸ்லாமிய அறிஞர்களின் 12 நூல்களுக்கு உத்தரப் பிரதேசத்திலுள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அதிரடியாக தடை விதித்திருக்கிறது.

மத்திய அரசின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் அலிகர் நகரில் அமைந்திருக்கிறது. இப்பல்கலைக்கழகத்தில் 1948-ல் இஸ்லாமியக் கல்வித்துறை அமைக்கப்பட்டது. இதையடுத்து, இத்துறையின் மூலம் உலகிலுள்ள முஸ்லிம் நாடுகளின் அறிஞர்கள், கல்வியாளர்கள் எழுதிய பல நூல்கள் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மவுலானா அப்துல் அலா மவுதூதி, எகிப்து நாட்டைச் சேர்ந்த சையத் குதுப் ஆகியோர் எழுதிய 12 நூல்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நூல்களுக்குத்தான் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகம் தடை செய்திருக்கிறது.

இதுகுறித்து அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக இஸ்லாமிய கல்வித்துறையின் தலைவர் பேராசிரியர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில், “மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகியோரின் நூல்களுக்கு தடை விதித்திருக்கிறோம். காரணம், இருவரும் தீவிரவாதத்தை போதிப்பதாக புகார்கள் வந்ததுதான். சர்ச்சைகள் கிளம்புவதை நாங்கள் விரும்பவில்லை” என்று தெரிவித்திருக்கிறார். தடை செய்யப்பட்ட இந்நூல்களில் இஸ்லாமியர்களுக்கு தனி நாடு அமைக்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும், மவுலானா அப்துல் அலா மவுதூதி, சையத் குதுப் ஆகியோர் தமது சொந்த நாட்டை எதிர்த்தே எழுதியவர்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, இருவருமே தமது நாட்டின் அரசுகளால் தண்டிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள்.

ஆகவே, இந்த இருவரின் நூல்களை பாகிஸ்தான், எகிப்து உள்ளிட்ட பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் தடை செய்துவிட்டன. ஆனால், இந்த விவரங்கள் அறிந்தோ, அறியாமலோ இருவரது நூல்களும் தொடர்ந்து இந்தியக் கல்வி நிறுவனங்களில் போதிக்கப்பட்டு வந்தன. எனவே, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சில பேராசிரியர்கள் இப்பிரச்னையை சமீபத்தில் எழுப்பி, இருவரது நூல்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் கடிதம் எழுதினர். அதோடு, வேறு சில சமூக ஆர்வலர்களும் இந்நூல்களுக்கு தடை விதிக்கக் கோரி பிரதமருக்கு தனியாகக் கடிதம் எழுதினர். இதையடுத்து, இந்நூல்கள் குறித்து மத்திய பல்கலைக்கழக மானியக்குழுவிடம் பிரதமர் அலுவலகம் விளக்கம் கேட்டது. எனவே, இப்பிரச்னையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் தாரீக் மன்ஜூர் நேரடியாக தலையிட்டார். இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 12 நூல்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

எனினும், இந்நூல்கள் டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் ஹம்தர் பல்கலைக்கழகங்கள், ஹைதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தொடர்ந்து போதிக்கப்பட்டு வருகிறது. தவிர, நாடு முழுவதிலுமுள்ள மேலும் பல சிறுபான்மைக் கல்லூரிகளின் இஸ்லாமிய கல்விப் பிரிவுகளிலும் போதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இப்பிரச்னையை பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் கையில் எடுத்திருக்கிறது. இந்நூல்களை போதிக்கும் கல்வி நிறுவனங்களை அடையாளம் கண்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தி வருகிறது. இதன் காரணமாக, இனி இந்நுல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் தடை விதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.


Share it if you like it