உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை இடிப்போம் என்று அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், அயோத்தியா ராமர் பிறந்த இடம். ஆகவே, அந்த இடத்தில் மீண்டும் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று ஹிந்துக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ம் தேதி ஆயிரக்கணக்கான ஹிந்து கரசேவகர்கள் ஒன்று கூடி பாபர் மசூதியை இடித்தனர். இது தொடர்பாக நடந்த சட்டப்போராட்டத்தில், அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததற்காக ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதால், ஹிந்துக்களுக்கு ஆதரவாக தீர்ப்புக் கிடைத்தது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ளலாம் என்று கடந்த 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதையடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ராம ஜென்ம பூமி அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, 1,800 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சூழலில், 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதி பொதுமக்கள் வழிபாட்டுக்காக அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். அயோத்தி விவகாரம் பா.ஜ.க.வின் நீண்டகால முயற்சி என்பதால், இக்கோயில் திறக்கப்படுவது ஹிந்துக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, 2024-ல் மக்களவைத் தேர்தல் நடக்கவிருப்பதால் ராமர் கோயில் திறப்பு அறிவிப்பு, அரசியல் தளத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த நிலையில்தான், அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு சார்பில் வெளியாகும் ‘கஜ்வா இ ஹிந்த்’ என்ற பத்திரிகையின் தலையங்கப் பக்கத்தில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலை தகர்த்து விட்டு, அங்கு மீண்டும் மசூதி கட்டப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, “பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டப்பட்டு வருவது போல், அது தகர்க்கப்பட்டு அந்த சிலைகள் மீது பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும். இந்திய முஸ்லிம்கள் இந்த புனித போருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் எங்களது அறிவுறுத்தலை, வெறும் பாகிஸ்தானிய அதிகார வகுப்பின் பிரசாரம் என்று அலட்சியம் செய்ய வேண்டாம்.
இதனால் ஏற்படும் பொருள் இழப்பு குறித்து இந்திய முஸ்லிம்கள் அஞ்சக் கூடாது. ஏன் என்றால் பல தசாப்தங்களாக நீங்கள் வாழ்க்கை மற்றும் சொத்து ஆகியவற்றை இழந்து விட்டவர்கள். புனிதப் போருக்கு இந்த வாழ்க்கை, பொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் பிறகு பெரியளவில் இழப்பு ஏற்படாது. மதச்சார்பற்ற என்ற பதம் இந்திய முஸ்லிம்களுக்கான ஒரு நரகம். இந்து – முஸ்லிம் ஒற்றுமை கோஷம் என்பது ஏளனத்துக்குரிய ஒரு கேலி நாடகம். ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டமும் முஸ்லிம் அரசாட்சியின் ஒரு பகுதியாக மாறும். சிலை வழிபாடும் ஒழிக்கப்படும்” என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அல்கொய்தா புனிதப் போரில் ஈடுபட திட்டமிட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. ஆகவே, மத்திய அரசு உஷாராக இருப்பது அவசியம்.