மதரஸா ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு: உ.பி. முதல்வர் யோகி அதிரடி!

மதரஸா ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு: உ.பி. முதல்வர் யோகி அதிரடி!

Share it if you like it

மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி காட்டி இருக்கிறார்.

உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்தே அம்மாநிலத்தில் பல்வேறு அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். குறிப்பாக, வன்முறை, கலவரம், பாலியல் பலாத்காரம் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் வீடுகளை இடித்து தரைமட்டமாக்கும் புல்டோசர் கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, மதரஸாக்களுக்கு கிடுக்கிப்பிடி போட்டார். அதாவது, 2014-ம் ஆண்டுக்கு முன்புவரை உத்தரகாண்ட் மாநிலத்தில் செயல்படும் மதரஸாக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2,21,800 பேர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு மானியமாக 14.50 கோடி ரூபாயை அரசு வழங்கி வந்தது. ஆனால், மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும், மதரஸாக்களில் பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, மதரஸாக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 26,394 என்று குறைந்தது. அதாவது, 2 லட்சம் மாணவர்கள் திடீரென மாயமாகினர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், மதரஸாவில் பயிலும் மாணவரிகளின் எண்ணிக்கையை போலியாக கூடுதலாகக் காட்டி, அரசை ஏமாற்றி மானியத்தை பெற்று வந்தது அம்பலமானது.

இதையடுத்து, சுதாரித்துக் கொண்ட யோகியும், உ.பி. மதரஸாக்களில் பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிட்டார். காரணம், நாட்டில் 19,132 மதரஸாக்கள் அரசு அனுமதியோடு செயல்பட்டு வருவதாக கணக்கிடப்பட்டிருக்கும் நிலையில், அதிகபட்சமாக உ.பி. மாநிலத்தில் மட்டும் 16,500 மதரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. ஆகவே, மதரஸாக்கள் மீது தனது பார்வையை செலுத்திய யோகி, ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிட்டார். இதனால், 4 லட்சமாக இருந்த மதரஸா மாணவர்களின் எண்ணிக்கை 1.20 லட்சமாகக் குறைந்தது. அடுத்தகட்டமாக, மாநிலத்திலுள்ள அனைத்து மதரஸாக்களிலும் சுதந்திர தினம், குடியரசு தினத்தன்று தேசியக்கொடியேற்றி கொண்டாட வேண்டும். தினசரி காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு தேசியகீதம் பாட வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, புதிய மதரஸாக்களுக்கான மானியத்தை நிறுத்தினார். இதன் மூலம், மாநிலத்தில் அரசு அனுமதி பெற்ற 16,500 மதரஸாக்கள் செயல்பட்டு வந்தாலும், 558 மதரஸாக்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கிறது.

இந்த நிலையில்தான், யோகி தனது அடுத்த அதிரடியை நிகழ்த்தி இருக்கிறார். அதாவது, மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். காரணம், மதரஸாக்களில் தற்போது அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியல் போன்ற இஸ்லாம் அல்லாத பாடங்களும் கற்பிக்கப்படுகிறது. ஆகவே, கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதுடன், ஆசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது தற்போது, மதரஸாக்களின் தனிப்பட்ட நிர்வாகத்தால் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பட்டப்படிப்புடன், பி.எட். முடித்திருக்க வேண்டும். ஆனால், இனிமேல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எப்படி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமோ, அதேபோல, மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதை மீறி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமித்தால், மதரஸாக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி திருப்பப் பெறப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it