வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்!

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்!

Share it if you like it


நம் மண்ணில் தோன்றிய மகான்களில் ஒருவர் ஜீவகாருண்யத்தின் பெருமையை மக்களுக்கு போதித்தவரான வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் ஆவார்.
தானங்களில் சிறந்தது அன்ன தானமே என்று கூறி வடலூரில் சத்திய தருமச்சாலை அமைத்து ஏழைகளின் பசியாற்றினார். அவர் அன்று ஏற்றிய அடுப்பு இன்று வரை அணையாது எரிந்து, ஏழை மக்களின் பசியை போக்கி வருகிறது.

சித்தர்களில் ஒருவராக கருதப்படும் வள்ளலார் தன் வாழ்க்கையில் நிகழ்த்திய அற்புதங்கள் பல. அவற்றில் இரண்டு சம்பவங்களை இங்கு காணலாம். வள்ளலார் தன்னை நாடி வரும் பக்தர்களுக்காக அயராது உழைத்து கொண்டிருந்ததால் அவருக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால் சிறிது ஓய்வெடுக்க வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு தம் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அப்போது கோடைப்பருவமான சித்திரை மாத நேரத்தில் மழையில்லாமல் ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டது. அறு, குளங்கள், ஏரிகள், கிணறுகள் நீரில்லாமல் வறண்டு போயின. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வள்ளலாரை சந்தித்து தங்கள் குறையை கூறி வருந்தினர். உடனே வள்ளலார் 6 குடங்களில் தண்ணீரைக் கொண்டு வந்து தமது பாதங்களில் ஊற்றும்படி கூறினார். அவர் கூறியப்படி மக்கள் அலைந்து திரிந்து 6 குடங்களில் நீர் எடுத்துவந்து அவரது பாதத்தில் ஊற்றினர். அன்றைக்கே வானம் கறுத்து நல்ல மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி விவசாய பயிர்களும் செழித்து வளர்ந்தன. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்து வள்ளலாரை போற்றினர்.

கனவில் வந்த உத்தரவு ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக வள்ளலார் அமைத்த தருமச்சாலைக்கு, வடலூரை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து பலர் தங்கள் வயலில் விளைந்த நெல்மணிகளை அனுப்பி வைப்பர். அதை தருமசாலையில் உள்ள பணியாட்கள் அரிசியாக்கி, உணவுக்கு தயார் செய்வார்கள். ஒருநாள் தருமசாலையில் அடுத்த நாள் உணவு தயாரிப்பதற்கு தேவையான நெல்மணிகள் தீர்ந்துபோயின. தருமசாலையின் நிர்வாகி இந்த விஷயத்தை வள்ளலாரிடம் கூறினார். அதை கேட்ட வள்ளலார் கவலை வேண்டாம் நாளைக்கு தேவையானவை வந்து சேரும் என கூறினார். வள்ளலார் கூறினால் அது நிச்சயம் நடக்கும் என்பதை அறிந்தாலும் நெல்மணிகளை அரிசியாக்கி அதை உரிய நேரத்தில் எப்படி சோறாக்குவது என்று அந்த நிர்வாகி கவலைப்பட்டார். இருப்பினும் வள்ளலார் கூறியதால் நிர்வாகி அதை பற்றி எதுவும் கூறவில்லை.

மறுநாள் காலை வள்ளலார் சொன்னது போலவே திருத்துறையூரில் இருந்து ஒரு பண்ணையார் மூன்று மாட்டு வண்டிகளில் தருமசாலைக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்திருந்தார். ஆச்சரியம் என்னவென்றால் அவர் நெல்மணிகளுக்கு பதிலாக அரிசியாகவே கொண்டு வந்திருந்தார். இதை கண்டு வியப்படைந்த தருமசாலை நிர்வாகி பண்ணையாரிடம் இதற்கான காரணத்தை கேட்டார். அதற்கு அந்த பண்ணையார், நேற்று இரவு வள்ளலார் தன் கனவில் வந்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார் என்றும் அதனால் உடனே அரிசி மூட்டைகளை கொண்டு வந்ததாகவும் கூறினார். இதை கேட்ட தருமசாலை நிர்வாகி வள்ளலாரின் மகிமையை நினைத்து அவரை மனதார வணங்கினார்.
இவ்வாறு மக்களுக்கு ஏற்பட்ட குறைகளை உடனடியாக தீர்த்து வைத்து அருள் புரிந்த இராமலிங்க அடிகளாரை நாம் மனதார போற்றி வணங்குவோம்.


Share it if you like it