நமது நாடு பொருளாதார வளர்ச்சி பெற, “சுதேசி உணர்வு” மட்டுமே உதவும் என சுதந்திரத்திற்காக உழைத்தப் பெரியோர்கள் உறுதியாக நம்பினார்கள். திலகர், காந்திஜி, சிதம்பரனார் போன்றோர் அன்னியப் பொருட்களைப் பகிஷ்கரிக்க, இயக்கம் நடத்தினார்கள், சுதேசிப் பிரச்சாரம் செய்தார்கள். நமது நாடு பொருளாதார விடுதலை பெற, உள்நாட்டிலேயே தொழில் துவங்குவது தான், மாற்று வழி என்று கண்டனர்.
காந்திஜி, கதர் இயக்கம் தொடங்கினார். அதற்கு முன்னரே, பாரதீயர்கள் வியாபாரத்தில் சுயசார்பு பெற, சுதேசி இயக்கம் ஆரம்பித்தார், வ.உ.சிதம்பரனார். நாமும் வியாபாரத்தில், பொருளாதாரத்தில் முன்னேறினால், ஆங்கிலேயர் இங்கு ஆட்சி தொடர்வது சுலபம் அல்ல என்பது, அவர்கள் எண்ணமாக இருந்தது. அதன் விளைவாக உதித்தது தான், “சுதேசிக் கப்பல் கம்பெனி”.
1-10-1906 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்தக் கம்பெனியில், ஒரு பங்கின் விலை ரூ.25/- மதுரை தமிழ் சங்கத் தலைவர் பாண்டித்துரை, சாமித் தேவர் இந்தக் கம்பெனிக்குத் தலைவர், சிதம்பரனார் செயலாளர். ஆரம்பத்தில், பங்கு விற்பனை குறைவாகவே இருந்தது. சிறிது, சிறிதாக வளர்ந்தது.
தூத்துக்குடிக்கும் – கொழும்புவிற்கும் இடையே, கப்பல் ஓடத் தொடங்கியது. முதலில் வாடகைக்குக் கப்பல் வாங்கப்பட்டது. ஆங்கிலேயர் இதற்கு அனுமதிப்பார்களா, என்ன? மனம் தளராத சிதம்பரனார், கொழும்பு சென்று குத்தகைக்குக் கப்பல் கொண்டு வந்தார் என்றாலும், பிரச்சினை தொடர்ந்தது. எனவே, சொந்தமாகக் கப்பல் வாங்கத் திட்டமிட்டார். நிதி திரட்ட, ஆரம்பித்தார். வட பாரதத்தில் உள்ளவர்களையும், கம்பெனியில் சேர்த்தார். கப்பல் வாங்க பம்பாய் சென்றார். கப்பல் கிடைக்கக் கால தாமதம் ஏற்பட்டது.
ஒரே மகன், “உலகநாதன்” நோயில் இறந்தார். அந்த நிலையிலும், நண்பர்கள் வற்புறுத்தியும், கப்பல் வாங்காமல் திரும்ப, அவருக்கு மனம் வரவில்லை . பின், திலகரின் உதவியுடன் ‘காலியா’ என்ற கப்பலுடன், ஊர் திரும்பினார். வேதமூர்த்தி என்பவர் பிரான்ஸிலிருந்து மற்றொரு கப்பல் வாங்கி வந்தார். இரண்டு இயந்திரப் படகுகளும் சேர்ந்தன. எல்லோருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.
‘மலடியாக இருந்த பெண், ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்ற சந்தோஷத்தைப் போல் மகிழ்வாள், பாரத மாதா’ என்று பாரதியார், இந்தியா பத்திரிகையில் இது பற்றிக் குறிப்பிட்டார். சுதேசி உணர்வு வளர்ந்து விட்டால், தன் ஆதிக்கம் செல்லாது என உணர்ந்த ஆங்கிலேயர், பல இடையூறுகளைச் செய்தனர்.
ஆங்கிலேயக் கப்பல்களில் கட்டணத்தைக் குறைத்தனர் என்றாலும், மக்கள் ஆதரவு சுதேசிக் கப்பலுக்கே இருந்தது. சிதம்பரனார், கம்பெனியை விட்டு விலகினால், இரண்டு லட்ச ரூபாய் தருவதாக அவரிடம் ஆசை காட்டினார்கள். அது மட்டுமா? இந்திய அதிகாரிகள் சுதேசிக் கப்பல்களில் பயணம் செய்யக் கூடாது என்று சப் மாஜிஸ்ட்ரேட் வாலர் ஆணையிட்டார்.
வெள்ளையர்கள், இந்திய வணிகர்களை மிரட்டினர். ஆங்கிலேயக் கப்பல்களில் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்றனர். சில இந்திய அதிகாரிகளை ஓய்வு பெறச் செய்தனர். சிலர் இட மாற்றம் செய்யப்பட்டனர். இருந்தாலும், சுதேசிக் கப்பலுக்கு மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே போயிற்று. ஆங்கிலேயக் கப்பல்கள் ஆளே இல்லாமல் செல்ல ஆரம்பித்தன. பல தடைகள், இடையூறுகளையும் மீறி, சுதேசிக் கப்பல் கம்பெனி வளர்ந்தது.
வ.உ.சிதம்பரனாரின் முயற்சியும், நாட்டில் அப்போதைய சுதந்திர உணர்வும் தான் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன. அதற்கு அவர் அடைந்த பயன், 1908 முதல் 1912 வரை கடுங்காவல் தண்டனை. கண்ணனூர், கோவை சிறைகளில் கொலைகாரர்களுடன் சிறை வாசம். சிறையில் கூட, அவருக்குக் கால் விலங்கு போட்டனர். சணல் நார் உரித்தார், கல் உடைத்தார், செக்கிழுத்தார், எனினும் சிந்தை கலங்கவில்லை.
அவர் மீது சாட்டப்பட்ட முதல் குற்றச் சாட்டு, சுதந்திரமாகக் கப்பல் ஓட்டியது தான். திலகர், சிதம்பரனார் போன்றோர் வெறும் அரசியல் சுதந்திரத் திற்காக மட்டும் போராடவில்லை, பெற்ற சுதந்திரத்தைக் காத்துக் கொள்ள, “பொருளாதார சுய சார்பு” வேண்டும் என்றும், கருதினார்கள். அவர்களுக்கு நெடுநோக்குப் பார்வை இருந்தது.
நம் நாட்டைப் பற்றிய தாழ்வான சிந்தனை, வெளிநாட்டைப் பற்றிய உயர்வான சிந்தனை படித்த மக்களிடையேயும் உள்ளது. ‘சுதேசிப் பெருமிதம் ஒன்றே இதற்குத் தீர்வு’
‘செப்டம்பர் 18, அமரர் சிதம்பரனாரின் நினைவு நாள். அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலி, அவர் வாழ்நாளில் பெரிதும் நேசித்து வளர்த்த, “சுதேசி உணர்வை”க் கடைபிடிப்பது தான்.
- இரா. இராசேந்திரன்