கோவை – சென்னை சென்ட்ரல் இடையிலான ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நேற்று துவங்கியது. முதல் நாள் பயணம் என்பதால் பயணிகள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் டிக்கெட் புக் செய்து இருந்தனர். அந்தவகையில், ரயிலின் முன் நின்றும் இருக்கைகளில் அமர்ந்தவாறும் புகைப்படங்கள், காணொளிகளை பொதுமக்கள் ஆர்வமுடன் எடுத்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து, ரயில் பயணம் குறித்து கோவை ஜோதிபுரத்தை சேர்ந்த மௌலி என்பவர் கூறியதாவது ;
இன்டர்சிட்டி ரயிலில் ஏசி சேர் கார் வகுப்பில் பயணித்தாலும் அதிர்வுகள் இருக்கும். ஆனால், இந்த ரயிலில் அதிர்வுகள் ஏதும் இல்லை. ரயில் புறப்பட்டு ஒரு மணி நேரத்தில் டீ அல்லது காபி, 2 பிஸ்கெட்கள் வழங்கப்பட்டன. சுமார் 8 மணியளவில் காலை உணவு வழங்கப்பட்டது. முன்பதிவின்போது அசைவத்தை தேர்வு செய்திருந்தவர்களுக்கு ஆம்லெட், 2 பிரட், பட்டர், முறுக்கு, லஸ்ஸி ஆகியவை அளிக்கப்பட்டன. சைவத்தில் 2 இட்லி, உளுந்துவடை, பொங்கல், சாம்பார், சட்னி, கேசரி, முறுக்கு, லஸ்ஸி ஆகியவை அளிக்கப்பட்டன.
காலை 10 மணியளவில் மீண்டும் ஒரு டீ அல்லது காபி அளித்தனர். அடுத்து எந்த ரயில்நிலையம் வரப்போகிறது என தமிழ், ஆங்கிலம், இந்தியில் அறிவிப்பு செய்கின்றனர். ஏசி சேர் கார் வகுப்பில் கட்டணத்தை சற்று குறைத்து ரூ.1,000 என நிர்ணயித்தால், பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.
நன்றி; இந்து தமிழ்