காசி தமிழ் சங்கமம்: 2,500 பேர் பங்கேற்பு!

காசி தமிழ் சங்கமம்: 2,500 பேர் பங்கேற்பு!

Share it if you like it

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து 2,500 அறிஞர்கள் பங்கேற்க இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

“காசி தமிழ் சங்கமம்” இணைய தளத்தை மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, இந்நிகழ்ச்சி தொடர்பாக டெல்லி தேசிய ஊடக மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர், “காசிக்கும் தமிழகத்துக்குமான கலாசார, பண்டைய தொடர்பு மற்றும் அறிவுசார் தொடர்புகளை கண்டறியும் விதமாகவும், புதுப்பிக்கும் விதமாகவும் காசி தமிழ் சங்கமம் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றனர்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள பன்னெடுங்கால தொடர்புகளை நினைத்து போற்றும் வகையில், காசி தமிழ் சங்கமம் திருவிழா நடைபெற இருக்கிறது. இத்திருவிழாவில், தமிழ் மொழியின் மாண்புகளை, பாரம்பரிய பெருமைகளை, கலாசார அருமைகளை விளக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நவம்பர் 16 முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில், மகாகவி சுப்பிரமணிய பாரதிக்கு ஓர் இருக்கை அமைக்கப்பட்டிருக்கிறது. பாரதியாரின் உணர்வுப்பூர்வமான வரிகளுக்கு உயிரூட்டும் வகையில், இந்த இனிமையான நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், ராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் இருந்து தமிழ்மொழியின் பாரம்பரிய கலை, இலக்கியம், ஆன்மிகம், கல்வி போன்ற 12 பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் சுமார் 2,500 பேர் காசிக்கு ரயில் மூலம் சிறப்பு விருந்தினராக அழைத்துச் செல்லப்படுவார்கள். காசி தமிழ் சங்கமம், தமிழ்மொழி மற்றும் தமிழ் மக்களின் பெருமைகளை நாடறியச் செய்யும். இந்த நல்ல முயற்சியை தமிழக பா.ஜ.க. சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்” என்றார்.


Share it if you like it