திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய திருமாவளவன், பா.ஜ.க. ஒன்றும் பகை கட்சி கிடையாது என்று கூறியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வருகிறது. இதன் காரணமாக, பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வந்தார் திருமாவளவன். குறிப்பாக, சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லி வருகிறார். இதற்காக, சில பல போராட்டங்களையும், பொதுக்கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி வருகிறார். இந்த சூழலில்தான், பா.ஜ.க.வுக்கு வெள்ளைக்கொடி காட்டும் வகையில், பா.ஜ.க. ஒன்றும் பகை கட்சி கிடையாது என்று கூறியிருக்கிறார்.
அதாவது, பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, இன்றைய சமூக நிகழ்வுகளை சொல்லும் வகையில் ‘A படம்’ என்கிற பெயரில் ராஜகணபதி என்பவர், புதிய திரைப்படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், இயக்குனர் தர்மசீலன் செந்தூரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், “அம்பேத்கரை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவராக காட்டுவதாகத்தான் பல படங்களில் காட்சிகள் இடம் பெறுகின்றன. அது தவறு, அவர் எல்லோருக்குமானவர். சமத்துவம், ஜனநாயகம் என்று கூறியவர். அரசியலைப் பொறுத்தவரை, ஒரு தனி நபரை விமர்சிக்காமல், ஒரு கட்சியை விமர்சிக்காமல், கருத்தியல் சார்ந்து விவாதித்தால் யாருக்கும் பகை ஏற்படாது. கருத்தியலுக்கு இடையே நடக்கும் யுத்தம்தான் மனித குல வரலாறாக இருக்கிறது.
மனித நேயத்தை போற்றுவதும், அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதும், அமைதியை விரும்புவதும்தான் கம்யூனிஸம். பா.ஜ.க. ஒன்றும் பகைக்கட்சி கிடையாது. ஜாதி, மதம் மீது பகை இல்லை. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் இதுதான் மனித குலத்திற்கு பகை. ஒவ்வொரு ஜாதிக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத தடைகள் உள்ளன” என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வந்த திருமாவளவன் திடீரென பா.ஜ.க.வுக்கு வெள்ளைக்கொடி காட்டும் வகையில் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.