வானம் பொழிகிறது! பூமி விளைகிறது!! வீரபாண்டிய கட்டபொம்மன்

வானம் பொழிகிறது! பூமி விளைகிறது!! வீரபாண்டிய கட்டபொம்மன்

Share it if you like it

வீரபாண்டிய கட்டபொம்மன்

கட்ட பொம்மனின் முன்னோர்கள், விஜய நகர பேரரசை ஆண்டு வந்தவர்கள். தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் மீது முகமதியர்கள் படை எடுத்து வந்து நாட்டை கைப்பற்றும் நிலையில், கட்ட பொம்மனின் முன்னோர்களிடம் உதவி கரம் கேட்டனர், தமிழக மன்னர்கள்.

பிறகு, விஜய நகர போர் படை வந்து, மீண்டும் நாட்டை மீட்டு கொடுத்தற்காகவும், அவர்களின் வீரத்தை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு பாஞ்சாலக் குறிச்சியை, பரிசாக கொடுத்தனர். அப்போது முதல் தான், கட்ட பொம்முவின் வம்சம் பாஞ்சாலக் குறிச்சியை ஆட்சி செய்து வந்தனர் .

பிறப்பு மற்றும் குடும்பம்:

1760-ஆம் ஆண்டு, கட்ட பொம்மன் பிறந்தார். அவருக்கு, இரண்டு உடன் பிறந்த சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உண்டு. ஜக்கம்மாள் என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட கட்டபொம்மனுக்கு, வாரிசுகள் ஏதும் கிடையாது.

அரசனாக அரியணை ஏறுதல் :

1790-ஆம் ஆண்டு, தனது முப்பதாவது வயதில், அரசனாக முடி சூட்ட பட்ட கட்டபொம்மன், வெறும் ஒன்பது ஆண்டுகள், எட்டு மாதம், பதினான்கு நாட்கள் மட்டுமே உயிர் வாழ்ந்தார்.

அவர் பதவி ஏற்ற கால கட்டத்தில் தான், ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வணிகம் செய்வதாக நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவை அடிமைப் படுத்தி கொண்டு இருந்தார்கள்.

ஆங்கிலேயர்களின் சூழ்ச்சி :

இந்திய மன்னர்களுக்கு நவீன போர் கருவிகளை விற்பனை செய்து, பெரும் தொகையை பெற்று வந்தனர், ஆங்கிலேயர்கள். பல மன்னர்கள் எதிரி நாட்டிடம் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ள வேறு வழி இல்லாமல், போதிய பணம் இல்லாமல் இருந்தாலும், கடன் பெற்றாவது நவீன கருவிகளை, ஆங்கிலேயர்களிடம் இருந்து வாங்கியே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப் பட்டனர்.

அப்படி ஆங்கிலேயர்களின் வலையில் வீழ்ந்தவர் தான், ஆற்காடு நவாப். அவரின் கட்டுப்பாட்டில் தான், அப்போதைய தமிழ்நாடு இருந்தது.

ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்களிடம் இருந்து கடனுக்கு நிறைய ஆயுதங்கள் வாங்கி இருந்ததால், கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் இருந்தார்.

அவருக்கு கீழ் இருந்த சிற்றரசர்கள் சரியாக வரி கட்டாமல் இருந்தனர், வரியை முறையாக வசூல் செய்யும் திறமையும் அப்போது, நவாபிற்கு இல்லாமல் போனது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆங்கிலேயர்கள், நவாப்பிடம் நய வஞ்சகமாக பேசி, தாங்களே வரி வசூல் செய்து, கடனை ஈடு கட்டி கொள்வதாக, ஓப்பந்தம் செய்து கொண்டனர். வேறு வழி இல்லாமல், நவாப்பும் அதற்கு சம்மதித்து விட்டார்.

இதுதான் வீர பாண்டிய கட்ட பொம்மனுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் மோதல் உருவாக முதல் காரணமாக அமைந்தது.

ஆங்கிலேயர்களுடனான மோதல் :

வரி வசூல் செய்யும் உரிமையை பெற்ற ஆங்கிலேயர்கள், இந்திய சிற்றரசர்களிடம் வரி வசூல் செய்ய, ஜாக்சன் துரை என்ற அதிகாரியை நியமித்தனர். எல்லா சிற்றரசர்களையும் கீழ் படிய செய்வதில், வெற்றியும் கண்டார்.

ஆனால் அவரது வீரம், வீர பாண்டிய கட்ட பொம்மனிடம் விலை போகவில்லை.

வணிகத்திற்காக இங்கு வந்த ஆங்கிலேயர்கள், பின்னாளில் இங்கு இருந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி, வரி வசூல் செய்யும் உரிமையை பெற்று, ஆட்சி அமைப்பில் தலையிட்டனர்.

இதனால் எதிர்ப்பு குரல் கொடுத்து, சுதந்திர குரலை அன்றே எழுப்பினர். அதனால்.  முதலில் அவர்களை ஒடுக்குவதில் ஆங்கிலேயர்கள் குறியாக இருந்தனர்.

கட்டபொம்மன் ஜாக்சன் துரை :

என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு, ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த முடியாது என்ற நிலைப்பாட்டில், கட்டபொம்மன் உறுதியாக இருந்தார். வரி தர மறுத்த கட்ட பொம்மனிடம், நேரில் பேச்சுவார்த்தை நடத்த, ஜாக்சன் துரை சென்று, வரி கேட்ட போது, நான் ஏன் உனக்கு வரி தர வேண்டும் என, வீர வசனம் பேசி அவமதித்து விட்டார்.

இதனால் கடும் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், கட்ட பொம்மனை பழி தீர்க்க துடித்தனர்.

அதே சமயம், மற்ற நாட்டு அரசர்கள், வீர பாண்டிய கட்ட பொம்மனின் வீரத்தை எண்ணி, பெருமைப் பட்டனர். ஆனால், அவருக்கு ஆதரவு தர முன் வரவில்லை. காரணம், ஆங்கிலேயர்களை எதிர்த்து கொண்டு, வாழ முடியாது என்பதை உணர்ந்து இருந்தனர்.

ஆங்கிலேயர்களுடனான போர் :

1797-ஆம் ஆண்டு, பெரும் படையை திரட்டி கொண்டு, முதல் முறையாக பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி படை எடுத்து சென்ற ஆங்கிலேயர்கள், கோட்டையை தகர்க்க முடியாததால், தோல்வி அடைந்து, பின் வாங்கினர்.

பாஞ்சாலங்குறிச்சியை எப்படியும் கைப்பற்றியே ஆக வேண்டும் என, பெரும் படைகளை திரட்டி கொண்டு, பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களுடன், கோட்டையை சுற்றி வளைத்தனர்.

கடும் போர் நடைபெற்றது. பல ஆங்கிலேயர்கள் இறந்த போதும், பீரங்கிகளுக்கு முன்னாள், கோட்டையால் தாக்கு பிடிக்க முடிய வில்லை.

மரண தண்டனை :

சூழ்ச்சியால் கட்டபொம்மனை கைது செய்த ஆங்கிலேயர்கள், தங்களை எதிர்த்து போர் புரிந்த குற்றத்திற்காக, அவருக்கு மரண தண்டனை விதித்தனர்.

அதன்படி 1799 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி, கட்ட பொம்மன் திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு என்னும் இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.

இறுதியில், தூக்கு மேடையை முத்தமிட்ட சமயத்திலும், வீரம் குறையாமல் ஆங்கிலேயர்களை எதிர்த்து பேசி, மண்டியிடாமல் வீர மரணமடைந்தார், வீரபாண்டிய கட்டபொம்மன்.

  • கணேசன்

Share it if you like it