வேலூர் விமான நிலையம் – போக்குவரத்து பயன்பாடு தாமதத்தால் நீளும் அரை நூற்றாண்டு கால வேலூர் மாவட்ட மக்களின் காத்திருப்பு

வேலூர் விமான நிலையம் – போக்குவரத்து பயன்பாடு தாமதத்தால் நீளும் அரை நூற்றாண்டு கால வேலூர் மாவட்ட மக்களின் காத்திருப்பு

Share it if you like it

தற்போதைய வேலூர் மாவட்டத்தில் வேலூர் அடுத்த பொய்கை பகுதியில் அமைந்திருக்கும் விமான நிலையம் சுதந்திர இந்தியாவில் பிரதமராக பதவியேற்ற ஜவஹர்லால் நேரு அவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்கும் பயண திட்டத்திற்கு ஏதுவாக நாடு முழுவதும் கட்டமைக்கப்பட்ட சிறு விமான நிலையங்களில் ஒன்று. நேரு – இந்திராவின் பிரயாண பயன்பாட்டிற்கு பிறகு இன்று வரை இந்த விமான நிலையம் தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லை, என்றாலும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் முழு பராமரிப்பில் தான் இருந்து வருகிறது.

சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் சகல வசதிகளுடன் கூடிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த விமான நிலையம் உரிய கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுகை என்று பயன்பாட்டிற்கு வருமே ஆனால், அது வேகமாக வளர்ந்து வரும் பன்முக,பொருளாதார கேந்திரமான வேலூர் மாவட்டத்திற்கு பேருதவியாக இருக்கும்.

வேலூர் மாவட்டத்தில் தோல் நகரம் என்ற அடையாளத்தோடு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் ஆம்பூர் நகரை நோக்கி வரும் உள்நாட்டு -வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும், ஏற்றுமதி -இறக்குமதி சார்ந்த தொழில் வியாபாரிகளுக்கும் இந்த விமான நிலையம் வரப் பிரசாதமாக அமையும்.

ஆம்பூர் மட்டுமல்ல ராணிப்பேட்டை தொழில் வளாகம் , ஆற்காடு -மேல்விஷாரம்- தொடங்கி வாணியம்பாடி- பேரணாம்பட்டு வரையில் பரவி இருக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மற்றும் தொல்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகள் இந்த விமான நிலைய பயன்பாட்டின் மூலம் பெறும் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த வாய்ப்புகள் பெருகி அதன்மூலம் சுற்றுப்பகுதியில் வேலை வாய்ப்பு பெருகும் .

உலக தரம் வாய்ந்த மருத்துவ கேந்திரமாக விளங்கும் கிறிஸ்தவ மருத்துவ மையமான வேலூர் சிஎம்சி மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிக்கு வரும் உள்நாட்டு வெளிநாட்டு மக்களுக்கு பெரும் சேவையாக இருக்கும். வேலூரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் ஜவ்வாது மலையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மைய ஆய்விற்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

வேலூரில், இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் மலை சுற்றுலா தலமான ஏலகிரி மலை சர்வதேச அளவில் பாரா கிளைடிங் என்னும் விண்வெளி சாகசத்திற்கும் மலை ஏற்ற பயிற்சிக்கும் பிரசித்தி பெற்றது.

இங்கு வரும் பாரா கிளைடிங் சாகச ஆர்வலர்கள், மலையேற்ற விரும்பிகள் , மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த விமான நிலையம் அத்தியாவசியமாகிறது.

மேலும் வேலூரில் சுற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் இந்தியாவின் இரண்டாவது தங்கக்கோவிலான அரியூர் நாராணி பொற்கோவில், வேலூரில் நடு நாயகமாக இருக்கும் நாயக்கர் கால ராய கோட்டை, மேல்விஷாரத்தில் அமைந்திருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய மசூதி, ஆற்காடு நவாப் வம்ச அரண்மனை, முத்து மசூதி ,பிரிட்டிஷ் கால ராணி கோட்டை , கண்ணாடி மாளிகை , ஏலகிரி மலை, ஜவ்வாது மலை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் பெரும் வருமானம் தரும் சுற்றுலா தலங்களாக வளரும்.

வெளிநாடு வெளி மாநில மக்களை தன்னை நோக்கி ஈர்க்கும் பிரசித்தி பெற்ற வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில், பள்ளிகொண்டா உத்திர அரங்கநாதர் கோயில், குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு விழா, விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஆன்மீக தலங்கள் வரும் பக்தர்களுக்கு பெரும் சேவையாக இருக்கும். வேலூர் மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் இயங்கும் தேசிய அளவில் பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கும் , மாவட்டத்தில் எங்கும் பரவி இருக்கும் சர்வதேச பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் படையெடுக்கும் மாணவர்களுக்கும் இந்த விமான நிலையம் தேவையாகிறது.

பெரும்பாலும் கல்வியில் முன்னேறிய பட்டம் மேற்படிப்பு பட்டதாரிகளை கொண்ட வேலூர் மாவட்டத்தில் குக்கிராமத்தில் கூட வீட்டிற்கு ஒருவர் வெளிநாடு போய் வேலை பார்க்கும் நபராக இருப்பார். அரபு நாடுகள் -ஐரோப்பிய யூனியன் தொடங்கி மலேசியா -சிங்கப்பூர் – அமெரிக்கா என்று உலகம் முழுவதும் போய் வேலை பார்த்து அன்னிய செலாவணி மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த விமான நிலையம் பெரும் வரமாக அமையும்.

கல்வி- மருத்துவம்- தொல்லியல் துறை- விண்வெளி ஆய்வு- ஆன்மீகம்- சுற்றுலா- மலை ஏற்றம்- – விண்வெளி சாகசம்- தொழில்- வேலைவாய்ப்பு மேம்பாடு வளர்ச்சி என்று உள்நாட்டு தொழில் உற்பத்தி பெருகவும் ,அதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அனைத்திற்கும் மேலாக தனிநபர் வருவாய் முதல் அந்நிய செலாவணி வரை பெருகவும், ஏதுவான பன்முகத் தொழில் கேந்திரமாக இருக்கும் வேலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இந்த விமான நிலைய விரிவாக்கம் கட்டாயத் தேவையாகிறது.

இந்த விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வருமே ஆனால் இதன் மூலம் நேரடி மறைமுக வேலை வாய்ப்புகள் பெருகி சிறு குறு தொழில்கள் ஏராளமாக உருவாக கூடும். இதன் மூலம் வளமான சமூகமும் சமூக குற்றங்கள் இல்லாத ஆரோக்கியமான தலைமுறை அமைவதற்கு ஏதுவாகும். எனவே பன்முக நலனை கட்டமைக்க இருக்கும் இந்த விமான நிலையத்தின் தேவையை கருத்தில் கொண்டு பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விரைவில் வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும். விமான நிலைய பணிகளை துரிதப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆட்சியாளர்கள் இதில் அரசியல் ஆதாயம் தேடாமல் மக்கள் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு.


Share it if you like it