ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – மானுடம் பெறும் பூர்வ புண்ணிய பாக்யமே கிருஷ்ண பிரேமை

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – மானுடம் பெறும் பூர்வ புண்ணிய பாக்யமே கிருஷ்ண பிரேமை

Share it if you like it

சனாதனிகள் அனைவருக்கும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா வாழ்த்துகள்.

ஒருத்தி மகனாய் பிறந்து ஒருத்தி மகனாய் வளர்ந்தவன். தன்னை மனதில் இருத்தியவளை கரம் பற்றியவன். அபயம் என்று அழைத்த கணம் துருபத கன்னிகையின் தன்மானம் காத்தவன் . தர்மத்தின் வழியில் வாழ்பவர்களுக்கு துணை நின்று உலகில் அதர்மம் அழிந்து தர்மம் நிலை பெற நிராயுதபாணியாக களம் கண்ட தர்ம ரட்சகன். என்றைக்கும் உலகில் தர்மத்தின் வழியில் வாழவும் மோட்சம் பெறவுமான உயர்ந்த வாழ்வியல் நெறியை பகவத் கீதை என்னும் வழிகாட்டும் நெறியாக நமக்கு வகுத்தளித்தவன் மாயக்கண்ணன்.

யது குலத்தில் தேவகி நந்தனாக பிறந்தவன் யசோதையின் நந்தனாக வளர்ந்தவன். ராதையின் மனம் கொள்ளை கொண்டவன். கோதையர்கள் சூழ கொஞ்சி மகிழ்ந்தவன். ஆயர் குலம் போற்றும் அசகாய சூரணவன். அண்ணன் பலராமன் கூட அவனது அன்பிற்கு கட்டுண்டு கிடக்க வைத்த கள்ளனவன். குழலூதி கானம் செய்து மக்களின் மனம் கவர்ந்தவன். ஆநிரைகளை வைத்து அளவற்ற அன்பின் மூலம் கோகுலம் வழங்கும் கோகுல நந்தனாவனன். கிரியை கையிலேந்தி கோவர்தன கிரிதரனாக குலத்திற்கே அடைக்கலம் கொடுத்த குல விளக்கு அவன்.

வெண்ணைத் திருட லீலைகளையும் செய்தான். அண்ட சராசரங்களையும் தன்னுள் அடக்கம் என்ற தரிசனத்தை தாய்க்கும் தந்தான். அழிக்க வந்த அரக்கர்களுக்கு கூட மோட்சம் நல்கிய மோகனனவன். தன் சரணம் பணிந்தவர்களுக்கு அன்பையும் ஐஸ்வர்யமும் வாரி வழங்கிய கண்ணனவன் .நட்பு பாராட்டிய குசேலனுக்கு அவனது நட்பிற்கு பரிசாக அஷ்ட ஐஸ்வர்யங்களும் குவிந்தது .கண்ணனின் காயத்திற்கு கலங்கி வஸ்திரத்தை உகந்த ளித்த துருபத குமாரிக்கு அதே வஸ்திரம் அட்சயமாக ஓங்கி வளர்ந்து அவளின் தன்மானம் காத்தது.

எந்த நிலையிலும் அபயம் என்று அழைத்தவர்களை கலங்கவிடாது காத்தருளும் அனந்த கிருஷ்ணன் அவன். தர்மத்தின் வழியில் நின்று குருஷேத்திரத்தை வழி நடத்திய விஸ்வகுரு அவன். யுத்தத்தின் இழப்புகளை தன் சோதரியும் ஏற்ற போது பாரபட்சம் இன்றி விதி வழியில் துயரற்ற தருமன் அவன். என் நிலையிலும் தர்மத்தின் வம்சம் அழியாது காத்து நின்ற இறை அம்சம் அவன்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் இயற்கையின் நியதி யுகத்தின் மாற்றம் என்ற மாற்றத்திற்கு தன்னையும் அர்ப்பணித்த தர்மவான் அவன். வரமோ சாபமோ அடியார்கள் உகந்தளித்த அனைத்தையும் மனமுவந்து ஏற்ற மகான் அவன். தர்மம் ஒன்றைக் காக்க நீராயுதபாணியாக களம் கண்டு சத்ரியனுக்கு தேரோட்டி சேவகம் செய்த ஆச்சாரியனவன். தர்மத்தின் வழியில் யுத்த களத்தை வழி நடத்திய ஆசிரியனும் அவன்.

தன் கடமை முடிந்த தருணத்தில் முடிவு நெருங்கிய போதிலும் பின்வாங்காது மனமு வந்து விதியின் வழியில் வாழ்ந்து மடிந்து போன தர்மத்தின் பரிபூரணம் அவன். அவனின் மாண்பை அறியாதவர்கள் அவனை பெண் பித்தன் என்று சொல்ல முடியும். ஆனால் உண்மையான காதலுக்கு தன்னையே அர்ப்பணித்தவன். தன்னை மனதில் நிறைத்து தனக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெண் மகளுக்கு வாழ்நாள் முழுவதும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த ஆண்மகன் அவன் .

காதலுக்கு கௌரவம் சேர்த்து காதலின் திரு உருவமாக வாழ்ந்தவன். இன்றைக்கும் காதலுக்கு கண்ணியம் சேர்க்கும் இலக்கணமாக இருப்பவன். சம்சார பந்தத்தில் இருந்த போதும் பற்றற்ற பற்றுதலை வாழ்ந்து காட்டிய மகா சன்னியாசி அவன். இல்லற வாழ்வில் அரசு அதிகாரத்தில் சகல சுகபோகங்களுடன் வாழும் போது கூட தாமரை இலை தண்ணீர் போல எதிலும் பற்றற்ற நிலையில் துறவு வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய உண்மையான துறவியவன். இல்லாததை துறப்பது துறவு அல்ல. நாவில் இருக்கும் நற்சுவையை கூட துறப்பதே உண்மையான துறவு என்பதை வாழ்ந்து வழிகாட்டிய மகான் ஶ்ரீ கிருஷ்ணன்.

அவன் மீது தாயாக அன்பு பொழிபவர்களுக்கு அவன் சேயாவான். அவன் மீது அன்பு பாசம் கொள்பவர்களுக்கு அவன் சோதாரனாவான். அவனிடத்தில் பணிந்து வணங்குபவர்களுக்கு அவன் வழிகாட்டும் ஆசான் ஆவான். அபயம் என்று தஞ்சம் கேட்பவர்களுக்கு அவன் அபயம் கொடுத்து அரவணைக்கும் அரும்பிறவி ஆவான். நான் வேறல்ல என் கண்ணன் வேற அல்ல நானே என் கண்ணனின் அன்பு கொடை தான் என்று சமர்ப்பணத்தோடு அவனை ஆத்மார்த்தமாக பணிபவர்களுக்கு அவனே யாவும் ஆவான். கண்ணனே யாதும் ஆவான் .அவனே அனைத்தும் ஆகி நின்று அனைத்திலும் வழி நடத்துவான்.

தர்மத்தின் திரு அவதாரமாக பூமியில் அவதரித்து அதர்மம் அழித்து தர்மம் நிலை பெற அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்த அந்த கிருஷ்ணனின் ஸ்ரீ ஜெயந்தி நாளில் உள்ளன்போடு கோகுல நந்தனின் பாதம் பணிவோம் .அவனின் அன்போடும் ஆசியோடும் தர்மத்தின் தார்ப்பர்யம் உணர்ந்து அவன் அருளாலே அவன் தாள் பணிந்து பிறவி கடல் கடந்து மோட்சம் என்னும் பேரும் பெறுவோம் .

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா ஹரே முராரே

ஹே நாராயணா ஹே வாசுதேவா


Share it if you like it