வேலூரில் சட்ட விரோதமாக ஐம்பொன் சிலைகளை கடத்திச் செல்ல முயன்றவர்களை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் அரியூர் போலீஸார் மலைக்கோடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த நிலையில், பள்ளிகொண்டா பகுதியில் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால், இருவரும் போலீஸாரிடமிருந்து தப்பிச்சென்றனர். எனினும், விடாமல் துரத்திச் சென்ற போலீஸார், இருவரையும் சாத்துமரை அருகே மடக்கி பிடித்தனர்.
பின்னர், அவர்கள் வைத்திருந்த கட்டைப் பையை சோதனை செய்தபோது, கருவேப்பிலை கட்டுகள் இருந்தன. உள்ளே பார்த்தபோது, இடையில் சுமார் ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடையும் கொண்டு சிவகாமி அம்மையாரின் ஐம்பொன் சிலை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிலையை பறிமுதல் செய்த போலீஸார், இருவரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட் ராஜ், கண்ணன் என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.