பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்துவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த விக்ரமனுக்கு, அக்கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதியின் எம்.பி.யுமான திருமாவளவன் சமூக வலைத்தளங்களில் வாக்குச் சேகரித்திருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் விக்ரமன். இவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பங்கேற்றிருக்கிறார். இந்த சீசனின் இறுதிக்கட்ட நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது. ஃபைலுக்கு முந்தைய வாரமான இந்த வாரத்தில் விக்ரமன், திருநங்கை ஷிவின், மைனா நந்தினி, கதிரவன், அசீம், ஏ.டி.கே., அமுதவாணன் ஆகிய 7 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்கள். இவர்களில் அமுதவாணன் ஃபைனல் டிக்கெட்டை வென்று ஃபைனல்ஸுக்குள் நுழைந்து விட்டார். மேலும், இந்த 7 பேரில் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறி விடுவார். மீதமுள்ள 6 பேரில் ஒருவர் பணப் பெட்டியுடன் புறப்பட்டு விடுவார். மீதம் இருக்கும் 5 பேரில் ஒருவர்தான் வின்னர். இந்த டைட்டில் வின்னர் யார் என்பது ஆசிம் மற்றும் விக்ரமனிடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடையும் நிலையில், டைட்டில் வின்னர் யார் என்கிற ஓட்டுப்பதிவு தற்போது தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில்தான், விக்ரமனுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று சிதம்பரம் தனி தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதான் கடும் விமர்சனங்களை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக, வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பேசுபொருளாக மாறி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட நிலைியல், வேங்கைவயல் கிராமத்திற்கு செல்லத் துணிவில்லாமல் சமூக வலைத்தளங்களில் கம்பு சுத்தி வரும் திருமாவளவன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் தனது கட்சிக்காரருக்கு ஓட்டுப்போடச் சொல்லி பதிவிட்டிருப்பது கேவலத்திலும் கேவலம் என்று ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக் கட்சியில் போட்டியிட்ட அனைவருமே எளிதாக வெற்றிபெற்ற நிலையில், திருமாவளவனை வெற்றிபெற வைப்பதற்கும் பெரும்பாடு படவேண்டியதாக இருந்தது. இந்த சூழலில், இவர் ஒருவருக்கு ஓட்டுக்கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. அதுவும் இவர் ஓட்டுக்கேட்டு அந்த வேட்பாளர் வெற்றிபெறுவார் என்பதும் நகைப்புக்குரியதாக இருக்கிறது என்று மற்றொருவர் பதிவிட்டிருக்கிறார். இன்னொருவரோ, ஒரு எம்.பி.யாக திருமாவளவனுக்கு எத்தனையோ கடமைகள் இருக்கின்றன. இதையெல்லாம் மறந்துவிட்டு, தனது கட்சியைச் சேர்ந்த, அதுவும் கேவலம் ஒரு தொலைக்காட்சியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஓட்டுக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதைவிட அசிங்கம் வேறென்ன இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இப்படியாக ஏராளமானோர் திருமாவளவனை கண்டித்தும் விமர்சனம் செய்தும் பதிவிட்டு வருகிறார்கள்.