மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எதிர்ப்பு: 1 மணி நேரம் காத்திருந்த அமைச்சர் பொன்முடி!

மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த எதிர்ப்பு: 1 மணி நேரம் காத்திருந்த அமைச்சர் பொன்முடி!

Share it if you like it

விழுப்புரம் அருகே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் உடலுக்கு அஞ்சலி செலுத்த விடாததால், அமைச்சர் பொன்முடி 1 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் அருண் (21). விழுப்புரத்திலுள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவரது இரு சக்கர வாகனம் காணாமல் போய்விட்டது. இதுகுறித்து போலீஸில் புகார் எதுவும் அளிக்காமல் தானாகவே தேடி வந்திருக்கிறார். இந்த சூழலில், அதே ஊரைச் சேர்ந்த சரத், வீரமணி, சத்தியராஜ் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து பைக்கை திருடியது தெரியவந்தது. மேற்கண்ட 4 பேருக்கும் கஞ்சா போதைப் பழக்கம் இருந்ததோடு, கஞ்சா விற்பனையும் செய்து வந்திருக்கிறார்கள். மேலும், இரு சக்கர வாகனங்களை திருடுவதையும் தொழிலாக வைத்திருந்திருக்கிறார்கள். மேலும், அருணுக்கும், மேற்கண்ட 4 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்திருக்கிறது. இதன் காரணமாகவே, அருணின் பைக்கை 4 பேரும் சேர்ந்து திருடி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், மேற்கண்ட 4 பேரிடமும் சென்ற தனது பைக்கை கேட்டிருக்கிறார் அருண். அதற்கு, தாங்கள்தான் பைக்கை திருடியதாகவும், விரைவில் திருப்பித் தருவதாகவும் கூறியிருக்கிறார்கள். இதை அருண் தனது செல்போனில் ரெக்கார்டு செய்து வைத்துக் கொண்டார். ஆனால், 4 பேரும் சொன்னபடி பைக்கை திருப்பித் தரவில்லை. அருண் பலமுறை கேட்டும் தராததால், மேற்படி ரெக்கார்டை வைத்து போலீஸில் புகார் அளிக்கப்போவதாகக் கூறி மிரட்டி இருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும், இரு சக்கர வாகனத்தை தருவதாக் கூறி அருணை பனப்பாக்கம் ஏரி பக்கம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு 4 பேரும் சேர்ந்து கஞ்சா அடித்து விட்டு, அருணை சரமாரியாகத் தாக்கி இருக்கிறார்கள். மேலும், அருணின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்து, அருகில் இருந்த கினற்றில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர். ஆனால், கொலைகாரர்களில் ஒருவன் அருணை கொலை செய்ததை கஞ்சா போதையில் ஊரில் சிலரிடம் உளறிவிட்டான்.

இதையறிந்த கிராம மக்கள், ஒன்று திரண்டு மேற்கண்ட 4 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து திருவெண்ணெய்நல்லூர் போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து, ஸ்பாட்டுக்குச் சென்ற திருவெண்ணெய்நல்லூர் போலீஸார், தீயணைப்புத்துறை உதவியுடன் அருணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அருண் கொலை தொடர்பாக சரத், வீரமணி, சத்தியராஜ் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி விட்டு, மற்ற மூவரையும் சிறையில் அடைத்தனர். இதனிடையே, அருணின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்றும், தங்களிடம் காண்பித்த பிறகுதான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அருணின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர்.

இந்த சூழலில், உயிரிழந்த மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமைச்சர் பொன்முடி இன்று காலை டி.எடையார் கிராமத்திற்குச் சென்றார். பொன்முடியின் சொந்த ஊரும் இதுதான். ஆனால், இக்கிராமத்திற்கு பொன்முடி எதுவும் செய்யவில்லை. இதனால், அவர் மீது அக்கிராம மக்கள் கடும் ஆத்திரத்தில் இருந்தனர். ஆகவே, அஞ்சலி செலுத்து வந்த அவரை, உயிரிழந்த அருணின் உறவினர்கள் தடுத்தனர். மேலும், அருணின் உடலை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, அஞ்சலி செலுத்து விடாமல் செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொன்முடி, அங்கேயே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தார். பின்னர், போலீஸாரும், அதிகாரிகளும் அருணின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி சமாதானப்படுத்தினர். இதன் பிறகே, அருணின் உடலுக்கு பொன்முடி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டுச் சென்றார். அஞ்சலி செலுத்த விடாமல் ஊர் மக்கள் அமைச்சரை தடுத்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share it if you like it