மகளிர் உரிமைத்தொகையை யார் கொடுக்கிறார்கள் தெரியுமா என்று அமைச்சர் பொன்முடி ஒரு மூதாட்டியிடம் கேட்க, பக்கத்தில் இருந்தவர்கள் முதல்வர் ஸ்டாலின் என்று எடுத்துக் கொடுக்க, அதற்கு அந்த மூதாட்டியோ, ‘இல்ல, இல்ல நான் எப்பவும் இரட்டை இலைதான்’ என்று பதிலளிக்க, அமைச்சர் பொன்முடி ஷாக்காகி விட்டார்.
தமிழகத்தில் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் தருமபுரியில் துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இத்திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் முகாமை அமைச்சர் பொன்முடி பார்வையிட சென்றார்.
அப்போது, விண்ணப்பம் வாங்க வந்த மூதாட்டி ஒருவரிடம், பொன்முடி, எந்த ஊரும்மா நீ என்று கேட்க, முத்தியால்பேட்டை என்று சொல்கிறார். இங்கதான் வரணுமா? என்று அருகில் இருப்பவரிடம் பொன்முடி விசாரிக்க, அவரும் ஆமாம் என்பதுபோல் தலையாட்டினார். தொடர்ந்து, எதுக்கு வந்திருக்கீங்க? என்று கேட்க, (மூதாட்டி தலையை மட்டும் அசைக்கிறார். உடனே, அருகில் இருப்பவர்கள் 1,000 ரூபாய் கொடுக்கிறாங்களே அதுக்குத்தான் என்று பதிலளித்தனர். அதற்கு அந்த மூதாட்டியோ தெரியும், தெரியும் என்று சொல்கிறார்.
அதற்கு அமைச்சர் பொன்முடி, தெரியும்னா சொல்லும்மா. அதத்தான கேட்குறேன். யார் கொடுக்கறாங்க தெரியுமா? என்று கேட்க, மூதாட்டி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். உடனே, விண்ணப்பத்தை நிரப்பும் பெண், முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுங்க என்று கூறினார். இதைச்கேட்ட அந்த மூதாட்டி, ‘இல்ல இல்ல.. நான் எப்பவுமே இரட்டை இலைதான்’ என்று சொல்ல, அமைச்சர் பொன்முடி ஷாக்காகி விட்டார். மேலும், அந்த மூதாட்டி கருணாநிதி என்று ஏதோ சொல்ல முயல, போதும் போதும் என்று பேச்சை நிறுத்தி விட்டார் அமைச்சர் பொன்முடி. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.