காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி… மரவள்ளி கிழங்கு புட்டு… வீடியோ வைரலானதால் கலக்கத்தில் போலீஸார்!

காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி… மரவள்ளி கிழங்கு புட்டு… வீடியோ வைரலானதால் கலக்கத்தில் போலீஸார்!

Share it if you like it

கேரளாவில் இலவம்திட்டா போலீஸார் காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி, மரவள்ளக் கிழங்கு புட்டு சமைத்து சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால், போலீஸாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.

கேரளா மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள இலவம்திட்டா போலீஸார், காக்கி உடை அணிந்த நிலையில், காவல் நிலையத்தில் சிக்கன் கிரேவி மற்றும் மரவள்ளிக் கிழங்கு புட்டு செய்து சாப்பிட்டுள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால், கடைக்குச் சென்று கோழி வாங்குவதில் தொடங்கி, வெங்காயம் வெட்டுவது, இஞ்சி, பூண்டு உரிப்பது, மசாலா போட்டு சமைப்பது, மரவள்ளிக் கிழங்கு புட்டு கிளறுவது, சமையல் செய்து முடித்ததும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டது வரை அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர், இந்த வீடியோவை பின்னணி இசையுடன் பக்காவாக எடிட் செய்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் இந்த வீடியோ பெற்றிருக்கிறது. ஆனால், உற்சாக மிகுதியில் வெளியிட்ட இந்த வீடியோதான் போலீஸாருக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், இது தொடர்பாக போலீஸாரிடம் விளக்கம் கேட்டு காவல்துறை கண்காணிப்பாளர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மேலும், இந்த நோட்டீஸுக்கு முழு ஸ்டேஷன் அதிகாரிகளும் பதிலளிக்க வேண்டும் என்று கேரள தெற்கு மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டிருக்கிறார்.

அதேசமயம், ஏராளமானோர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போலீஸாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.


Share it if you like it