பெண்ணை தலையில் அடித்த அமைச்சர்: பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

பெண்ணை தலையில் அடித்த அமைச்சர்: பதவி விலக அண்ணாமலை வலியுறுத்தல்!

Share it if you like it

வயது முதிர்ந்த தாய், தந்தைக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனுக் கொடுத்த பெண்ணை தி.மு.க. அமைச்சர் தலையில் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, மேற்கண்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அக்கட்சியினரின் அராஜகம் அதிகரித்து வருகிறது. போலீஸார் முதல் அரசு அதிகாரிகள் வரை ஒருமையில் பேசுவதும், தகாத வார்த்தைகளால் திட்டுவதும், கைநீட்டுவதும், நிருபர்களை ஏகவசனத்தில் பேசுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வளவு ஏன் சட்டமன்றத்திலேயே எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை ஒருமையிலும், போய்யா வாய்யா என்று ஏகவசனத்தில் திட்டுவதும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அப்படி இருக்க, சாமானிய பொதுமக்கள் படும் பாட்டைப் பற்றி கேட்டகவும் வேண்டுமா? அப்படித்தான் உதவி கோரி மனு கொடுத்த பெண்ணை தலையில் தாக்கி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் தி.மு.க. அமைச்சர் ஒருவர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பயனாளிகளுக்கு இலவச வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி பாலவநத்தம் ஊராட்சியில் நடந்தது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகிக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். நிகழ்ச்சி முடிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அமைச்சரிடம் மனு கொடுத்தனர். அப்போது, பாலவநத்தம் கிராமத்தைச் சேர்ந்த கலாவதி (45) என்பவரும் அமைச்சரிடம் மனு கொடுத்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும், இவரது பெற்றோர் வயது முதிர்ச்சி காரணமாக வீட்டிலேயே இருக்கிறார்கள்.‌

ஆகவே, கலாவதி தினக்கூலி வேலைக்குச் சென்று வருகிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பெற்றோர்களை பராமரித்து வருகிறார். இந்த வருமானம் போதுமானதாக இல்லாததால், தனது பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி கேட்டு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனிடம் மனுக் கொடுத்தார். அப்போது, தான் கடந்த பல வருடங்களாகவே தனது பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும்படி மனு கொடுத்து வருவதாகவும், இதுவரை எந்த அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை எனவும் அமைச்சரிடம் புகார் கூறினார். இதனால், ஆத்திரமடைந்த அமைச்சர் கலாவதி கொடுத்த மனுவை வைத்தே அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதுதான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறார். அமைச்சரின் இத்தகைய செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், “பாலவநத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம்” என்று கூறியிருக்கிறார். இதுதான் தமிழக அரசியலில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it