சாலைதான் வகுப்பறை… திராவிட மாடல் ஆட்சியில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி படித்த பள்ளிக்கு நேர்ந்த கதி!

சாலைதான் வகுப்பறை… திராவிட மாடல் ஆட்சியில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி படித்த பள்ளிக்கு நேர்ந்த கதி!

Share it if you like it

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பகவான் ஸ்ரீரமண மகரிஷி படித்த பெருமைக்குரிய சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சாலை ஓரங்களில் அமர்ந்து படிக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் சேதுபதி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில்தான் ஆன்மிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெருமைக்குரிய இப்பள்ளியில் தற்போது 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆனால், இப்பள்ளியில் 450 பேர் மட்டுமே படிக்கக் கூடிய அளவுக்குத்தான் கட்டட வசதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு வகுப்பிலும் 40 பேர் மட்டுமே படிக்க வேண்டிய சூழ்நிலையில், தற்போது 60 முதல் 70 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதோடு, ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதனால், பள்ளியில் கடும் இடம் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வெளியே இருக்கும் சாலையின் இருபுறமும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

மேலும், பள்ளி வகுப்பறையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக மாணவ, மாணவிகள் தரையில் அமர்ந்து கல்வி கற்றுக் வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. அதேபோல, இப்பள்ளியில் விளையாட்டு மைதானம் மற்றும் ஆய்வக வசதியும் இல்லை. இதனாலும் பள்ளி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்பதிலும், குறிப்பாக அரசுப் பள்ளியில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால், கல்வி கற்பதில் தடை ஏற்பட்டிருப்பது வேதனை அளிக்கும் வகையில் உள்ளது. ஆகவே, அரசு உடனடியாக தலையிட்டு இப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று பெற்றோர்களும், ஆசிரியர்களும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


Share it if you like it