கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி – இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.
“மத்தியில் அமையும் காங்கிரஸ் அரசு, இந்தியாவின் ஒவ்வொரு ஏழ்மைக் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு வருடம் தோறும் அவரது வங்கிக் கணக்கில் லட்ச ரூபாய் செலுத்தும். மாதம் அது கிட்டதட்ட எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.”
“நீங்கள் ஒரு வேலை பார்க்கலாம். இருந்தாலும் உங்கள் குடும்பம் ஏழ்மைக் குடும்பமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற வகையில் வருடம் தோறும் லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் நீங்கள் எந்த நாள் வரை இருக்கிறீர்களோ, அந்த நாள் வரை உங்கள் வங்கிக் கணக்கில் மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய், அதாவது வருடத்திற்கு லட்ச ரூபாய், டாண் டாணென்று வந்து கொண்டிருக்கும். இப்படியாக ஒரே வீச்சில் நாங்கள் நாட்டின் வறுமையை ஒழித்துவிடுவோம்.”
சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பெரிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. முன்னதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில் இந்த ‘ஒரு லட்ச ரூபாய்’ வாக்குறுதியும் சொல்லப்பட்டிருந்தது.
ராகுல் காந்தியைத் தவிர, இந்த வாக்குறுதியை இப்படித் தம்பட்டமாக, தடபுடலாக, ஜிகினா அலங்காரங்கள் செய்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்லக் காணோம். இந்த வாக்குறுதியை ராகுல் விளக்கிய விதத்தில் உள்ள பைத்தியக் காரத்தனமும் அரசியல் பிராடும் ராகுல் காந்திக்கு விசேஷமாக உரித்தானவை.
ஒரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கும்? அவர்களின் வருமானம் நிஜத்தில் எப்போது கூடும், அவர்களின் பொருளாதார நிலை எப்போது உயரும்? ஒரு நாடு சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் தொழில் பெருகி உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் தவிர – அரசு மட்டத்தில் லஞ்ச ஊழலைக் கட்டுப் படுத்தி, பொதுச் சொத்து விரயம் ஆவதையும் தடுத்தால் ஒழிய – மக்களுக்கு அந்தப் பயன்கள் கிடைக்காது.
ராஜஸ்தானில் பேசிவிட்டு மறுநாள் இன்னொரு மாநிலத்தில் மேடை ஏறிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்று சொன்னார். அப்படியானால், திருமண வயதை அடைந்தவுடன், ஏதோ வேலை இருக்கிறதோ இல்லையோ, எல்லா ஆண்களும் டும்டும் செய்து கொள்ள வேண்டியதுதான், புதுப்புது குடும்பங்களுக்கு மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும் என்கிறார் ராகுல் காந்தி. இந்த வாக்குறுதி அரசைப் போண்டி ஆக்குவது மட்டுமல்ல, வேறு வகைகளிலும் விபரீதம் செய்யும்.
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த வருடங்கள் கூட்டாக 38. ஒரு பிரதமரின் சிண்டைப் பிடித்து அவர் கையைக் கட்டி மத்தியில் சோனியா காந்தி அதிகாரம் செலுத்திய வருடங்கள் 10. ஆக மொத்தம் 48 ஆண்டுகள் நேரு குடும்பம் மத்திய அரசில் கோலோச்சியது. ராகுல் காந்தி சொல்லும் மிக எளிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சிந்திக்காத மண்டூகங்களா அவரது அம்மா, அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா?
இந்த லட்ச ரூபாய்ப் பணத்தை உத்தேசமாக எத்தனை குடும்பங்களுக்கு மத்திய அரசு இனாமாக அளிக்க வேண்டி இருக்கும், எத்தனை வருடங்கள் தரவேண்டி இருக்கும், அதற்கான ஆண்டுச் செலவு எவ்வளவு, அந்தப் பணத்திற்கான மூல ஆதாரம் என்ன, என்று ஒரு விவரமும் காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியோ தரவில்லை.
உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றன. அவை எல்லாம் தங்கள் குடிமக்களுக்கு ஒரு லட்சம், ரண்டு லட்சம் என்று ஒவ்வொரு வருடமும் பணம் கொடுத்து வந்தால் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏழ்மை விரட்டி அடிக்கப் படுமே?
கடந்த 45 வருடங்களாகச் சீனா அந்நிய முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, பொதுக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த நாடு ஏன் ராகுல் காந்தி பார்மூலவைப் பின்பற்றாமல் திடமான கடின வழியில் முன்னேறுகிறது?
எப்படிப் பார்த்தாலும் ராகுல் பேசியது குப்பை என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். இது நிஜத்தில் நடக்காது என்று அவர்களும் நினைப்பார்கள். இருந்தாலும், தலைக்கனம் ஏறிய ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக்காரனிடம், “அடுத்த மாதம் உன் திருவோட்டில் ஆயிரம் ரூபாய் போடுகிறேன்” என்று சொன்னால், அதை நம்ப முடிக்கிறதோ இல்லையோ அதைத் தேமே என்று கேட்டுப் போவான் அந்தப் பிச்சைக்காரன். அப்படித்தான் ராகுல் பேச்சைக் கேட்ட சாதாரண மக்கள் இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்.
ராகுலின் ராஜஸ்தான் பேச்சு டுபாக்கூர் பேச்சு என்பது எல்லா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். அவர்களின் முதல் பெரிய பிரச்சனை ராகுல் காந்தியும், பிள்ளைப் பாசம் மிக்க சோனியா காந்தியும்தான்.
திறமையும் தேசப் பற்றும் சுய மரியாதையும் உள்ள இளைஞர்கள் எவரும் காங்கிரஸுக்கு வரமுடியாமல், கட்சிக்குள் வளர முடியாமல், ஒதுங்கிப் போகிறார்கள். அதற்குக் காரணம், இந்த இருவரின் ராஜ தோரணை, எதேச்சாதிகாரம், மற்றும் தீராத பதவி மோகம். இந்த இருவருக்குச் சாமரம் வீசி, சலாம் போட்டு, கைகளும் தட்டி, தங்களின் ஆதாயத்தைக் கவனித்துச் சுகிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்ட சீனியர் தலைவர்கள்.
சரி, காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பேச்சின் போது அவர் நெஞ்சோடு நெஞ்சாக வைத்திருந்த துருப்புச்சீட்டைக் கவனித்தீர்களா?
ராகுல் காந்தி அறிவித்த லட்ச ரூபாய் வாக்குறுதியை, மத்தியில் அமையும் ‘காங்கிரஸ்’ அரசு நிறைவேற்றும் என்றார் அவர். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வென்று மத்தியில் ‘காங்கிரஸ்’ அரசை நிச்சயம் அமைக்கப் போவதில்லை. அந்தக் கட்சி போட்டியிடப் போவதே மொத்தம் சுமார் 330 இடங்கள்தான் என்றும் செய்திகள் வருகின்றன.
சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ. பி ஆகிய மூன்று மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். காரணம், நாங்கள் வலுவான ‘இண்டி’ கூட்டணி அமைக்க விரும்பினோம். காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மக்களின் தெளிவான தீர்ப்பைப் பெறும்” என்று, மத்தியில் அமையப் போகும் ஆட்சி இண்டி கூட்டணியின் ஆட்சிதான், காங்கிரஸ் ஆட்சி அல்ல, என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டத்தை அவர் அறிவித்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சியே தனது ஆட்சி அமையாது என்று அறிந்து, இண்டி கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, “காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருஷா வருஷம் லட்ச ரூபாயைக் காங்கிரஸ் அரசு செலுத்தும். இவ்விதமாக வறுமையை ஒழிப்போம்” என்று ஓட்டுக்காகப் பொது மக்களிடம் ராகுல் காந்தி பேசினால் என்ன அர்த்தம்? பிள்ளை பிடிக்க அலைபவன், கிடைக்கிற சிறுவர்களிடம் பேசும் ஆசை வாரத்தைதானே இது?