பொதுமக்கள் முதல் முதல்வர் வரை அலைக்கழித்த ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி – நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து விசாரிக்குமா?

பொதுமக்கள் முதல் முதல்வர் வரை அலைக்கழித்த ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி – நீதிமன்றங்கள் தாமாக முன் வந்து விசாரிக்குமா?

Share it if you like it

நீங்கள் மேலே பார்க்கும் புகைப்படம் ஏதோ கட்சிக் கூட்டம் அரசியல் நிகழ்வின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலோ அல்லது பண்டிகை விழா காலத்தில் சென்னை மாநகரில் வழக்கமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலோ இல்லை. விபத்து – போராட்டம் என்று அசாதாரணமாக சூழலில் ஏற்படும் நெரிசலும் இல்லை . கடந்த வாரம் சென்னை புறநகர் பகுதியில் ஏ ஆர் ரகுமான் மற்றும் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்த போது பல மணி நேரங்கள் தொடர்ச்சியாக அந்த சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் ஒரு பகுதி புகைப்படம் தான் இந்த காட்சி.

பல ஆயிரம் மக்களை திரட்டி ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் , எத்தனை நுழைவு இருக்கைகள் இருக்கிறது ? அதற்கு உரிய நுழைவு சீட்டுகள் எத்தனை விற்க போகிறோம்? அந்த வகையில் வரும் மக்களுக்கு தேவையான வாகன நிறுத்தம் – கழிவறை – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என்று அத்தனையும் முன்கூட்டியே திட்டமிட்டு தான் நிகழ்ச்சியை முன்னெடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதியும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வழங்கிய உள்ளூர் காவல்துறை நிர்வாகமும் இதையெல்லாம் ஒரு முறைக்கு இருமுறை விசாரித்து அனைத்தையும் சரிபார்த்து தான் அனுமதி வழங்க வேண்டும். இதுதான் சட்டத்தின் வழியில் எதார்த்த நடைமுறை.

சாதாரணமாகவே தினசரி காலை மாலை சென்னை மற்றும் புறநகரில் போக்குவரத்து நெரிசல் தினசரி செய்தியாகி வருகிறது வார கடைசியிலும் பண்டிகைக்கால விடுமுறை நாட்களிலும் போக்குவரத்து நெரிசலும் அதன் காரணமாக ஏற்படும் தாமதம் மன உளைச்சலும் பெரும் சிக்கலாக மாறி வருகிறது. இது போன்ற காலகட்டத்தில் பெருமளவில் மக்கள் கூடும் ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்த இருக்கும் போது அதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் எழாமல் அதையெல்லாம் சரி செய்யும் விதமாக தேவையான நிர்வாகம் நடைமுறைகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகளையும் உள்ளூர் காவல்துறை நிர்வாகமும் வழங்கி இருக்க வேண்டும். அதை முறையாக கண்காணித்து கட்டுப்படுத்தியும் இருக்க வேண்டும் இவையெல்லாம் முறையாக நடந்திருக்கும் பட்சத்தில் நிச்சயம் இது போன்ற ஒரு போக்குவரத்து நெரிசலும் பொதுமக்களுக்கான பெரும் இன்னலும் நேர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் கிட்டத்தட்ட நாள் முழுவதும் மணிக்கணக்கில் அங்கு காத்திருந்து அந்த குறிப்பிட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவைக் கடப்பதற்குள் போதும் போதும் என்ற அளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது . இதில் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு போனவர்கள் மட்டும் இல்லை. அந்த சாலையின் வழியாக சாதாரணமாக பிரயாணித்தவர்களும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைக்காக பயணப்பட்டவர்களும் சேர்த்து தான். அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள்? என்பதை இந்த புகைப்படமே விளக்கும். ஆனால் இந்த போக்குவரத்தை சரி செய்ய அந்த இடத்தில் போக்குவரத்து காவலர்களாக பணிகள் இருந்தவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? அல்லது நிலைமை கைமீறி போன பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா ? இல்லையா ?என்ற முழு பின்னணி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

காரணம் இந்த போக்குவரத்து நெரிசலில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் அந்த வழியே பயணப்பட்டவர்களும் மட்டுமே பாதிக்கவில்லை . அந்த வழியாக பயணித்த முதல்வரின் வாகனமும் அவரது பாதுகாப்பு வாகனமும் கூட இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து இருக்கிறது. உயர் அதிகாரிகளும் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகளும் களத்தில் இறங்கி பெரும் பிரயத்தனம் செய்த பிறகு அங்கு நிலைமை சீராகி முதல்வரின் வாகனமும் அவருடைய பாதுகாப்பு வாகனமும் பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர் எப்போதும் வழக்கம் போல பயணிக்கும் ஒரு சாலை எனும் போது அங்கு அவர் கடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாகவே அங்குள்ள காவல் துறைக்கு நிச்சயம் தகவல் போகும் .அந்த வகையில் அந்த வழியில் போக்குவரத்தை சரி செய்து உரிய பாதுகாப்பை வழங்கவும் தடை தாமதம் இன்றி முதல்வரின் வாகனம் கடந்து போகவும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அதற்காக அவர்கள் போக்குவரத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்கலாம் .அந்த அதிகாரம் அவர்களுக்கு உண்டு.

அப்படி இருக்க முதல்வரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க என்ன காரணம்? அவரின் பாதுகாப்பு அதிகாரிகளை களத்தில் இறங்கி போக்குவரத்து நிலையை சீர் செய்ய அளவிற்கு நிலைமை மோசமாக யார் காரணம்? என்ற உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் . கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர் இந்த மாநிலத்தின் முதல்வர் அவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக ஒரு பெரும் போக்குவரத்து நெரிசலில் அவருடைய வாகனம் சிக்குவதும் பெரும் பிரயத்தனத்திற்கு பிறகு அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு அனுப்பப்படுவதும் சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை. அதிலும் மாநகரத்தின் மாகாணத்தின் தலைநகரிலேயே அவருக்கு இப்படிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் நேரிடும் எனில் காவல்துறையை கையில் வைத்திருக்கும் அவர் ஒரு வகையில் உளவுத்துறை அமைச்சராக அவரேவும் இதற்கு உரிய விளக்கம் கொடுக்க வேண்டும். போக்குவரத்து காவல்துறையின் முக்கிய பொறுப்பாளர்கள் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டில் அவர்கள் உள்ளிட்ட அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

மாநில முதல்வரின் வாகனம் போக்குவரத்தில் சிக்கி அவரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் நேரிடுவது என்பது முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாக இருக்கும்? என்ற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் கூட இதற்கு காரணமான முக்கிய நபர்கள் மீது எந்த ஒரு விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் இல்லாமல் பெயரளவில் சில பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து துறை காவலர்களை பலிகடாவாக்கி இந்த பாதுகாப்பு குறைப்பாட்டை அப்படியே கடந்து போக பார்ப்பது ஆட்சியாளர்களுக்கு அழகல்ல.

அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கிறது. நிகழ்ச்சிக்கு பல ஆயிரங்களை கட்டணமாக செலுத்தி வந்தவர்கள் பல்வேறு இன்னல்கள் இடர்பாடுகளை அனுபவித்திருக்கிறார்கள். குழந்தைகள்- பெண்கள் என்று பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கடந்து இருக்கிறார்கள். குறிப்பாக பெண்கள் பல்வேறு பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதைப் பற்றிய புகார்கள் வந்து இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விஷயத்தை பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதற்கு மூல காரணமாக இருந்த அந்த இசையமைப்பாளரிடம் தமிழக அரசின் ஆட்சியாளர்களும் காவல்துறையோ இதுவரையில் எந்த ஒரு வழக்கையும் பதிவு செய்து விசாரணையில் தொடங்காமல் இருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.

தமிழகத்திற்கு வெளியே இருக்கும் அத்தனை ஊடகங்களிலும் விவாத பொருளாக மாறி இருக்கும் இந்த நிகழ்ச்சியின் சம்பந்தமான மோசடியும் இதனால் விளைந்த போக்குவரத்து நெரிசல் மாநில முதல்வருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளிட்ட விஷயங்களும் நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இருக்கும் ஊடகங்கள் இந்த விஷயத்தில் காக்கும் கள்ள மவுனம் அவர்களுக்கு பொதுமக்களைப் பற்றியும் மாநில முதல்வரின் பாதுகாப்பை பற்றியோ அக்கறையில்லை. மாறாக அவர்களின் பணம் ஆதாயம் உள்ளிட்ட ஒரு சார்பு நிலைப்பாடும் மட்டுமே பிரதானம் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.

எங்கேயும் சாதாரண சம்பவங்கள் நடந்தால் கூட தாமாக முன்வந்து கருத்து தெரிவிக்கும் மாநில உயர்நீதிமன்றம். தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த நிகழ்வை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பதும் இதைப் பற்றி எந்த ஒரு வழக்கும் பதிவு விசாரணையோ இல்லாமல் இருப்பதும் மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் இருக்கும் கடைசி நம்பிக்கையும் கேள்விக்குறியாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள முடியும் என்ற அளவிலான வரையறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் . அதைவிட பல மடங்கு நபர்களிடம் நுழைவு கட்டணங்களை விற்று பணம் பார்த்து இருக்கிறார்கள் . இதில் பெரிய அளவில் மோசடியும் பண மோசடியும் அரங்கேறி இருப்பது சந்தேகத்திற்கிடமின்றி அம்பலமாகிறது. இவ்வளவு நடந்த பிறகும் அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் அது சார்ந்த நபர்கள் மீது எந்த ஒரு கேள்வியோ வழக்கோ பதியாமல் மாநில அரசும் ஆட்சியாளர்களும் காவல்துறையும் கண்துடைப்பு அறிக்கைகளை வெளியிடுவதும் இதை அப்படியே கடந்து போக பார்ப்பதும் மாநிலத்தின் பாதுகாப்பிலும் சட்டம் ஒழுங்கு பொது அமைதியை பராமரிப்பதிலும் ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய திரையுலகம் தங்களுக்கு வாழ்வளிக்கும் பொது மக்களையே அச்சுறுத்தலில் ஆழ்த்தியிருக்கும் இந்த நிகழ்வை கூட கண்டிக்க மனமில்லாமல் கள்ள மவுனம் காக்கிறார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் இது துரதிஷ்டவசமாக நடந்துவிட்டது. ஆனால் நாங்கள் அனைவரும் ஏ ஆர் ரகுமானை முழுமையாக ஆதரிக்கிறோம் என்று பல ஆயிரங்கள் கொடுத்து ஏமாந்த ரசிகப் பெருமக்களையும் சம்பந்தமே இல்லாமல் அந்த சாலை வழியாக பயணித்த காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசலையும் மன உளைச்சலையும் அதன் காரணமான இடர்பாடுகளையும் அனுபவித்தவர்களையும் ஒட்டுமொத்தமாக அவமதிக்கிறார்கள்.

தமிழ் திரையுலகை சார்ந்த இந்த கருத்து கந்தசாமிகளுக்கு மக்களின் மீது எள்ளளவும் மரியாதையும் நம்பிக்கையோ நல்லெண்ணமோ இல்லை என்பதும் தெளிவாகிறது .அவர்களுக்கு அவர்களின் வருமானமும் பணமும் அதிகாரமும் மட்டுமே குறிக்கோள் .அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என்பதை அவர்கள் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்கள் . திருந்த வேண்டியது திரைப்படத் துறை சார்ந்தவர்களோ கருத்து கந்தசாமிகளோ அல்ல . தங்களின் உழைப்பின் மூலம் கிடைக்கும் அரும் பணத்தை பெரும் அளவில் பொழுதுபோக்கு என்ற பெயரில் திரைப்படங்களுக்கும் திரைப்படம் துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் வாரி இறைக்க தயாராக இருக்கும் பொறுப்பற்ற பொது மக்கள் தான் முதலில் திருந்த வேண்டும்.


Share it if you like it