இந்தியாவில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 37 லட்சம் பயனர் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பிரபலமான செயலி வாட்ஸ் ஆப். எனினும், இந்தியாவில்தான் வாட்ஸ் ஆப் பயனர்கள் அதிகம். இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். இந்த வாட்ஸ் ஆப், வெறும் தகவல்களை பரிமாறும் தளமாக மட்டுமல்லாமல், தற்போது பணப் பரிவர்த்தனை செய்யவும், தொழில் சம்பந்தமாக வீடியோ கால் பேசும் வசதியும், ஆவணங்களை அனுப்பவும் பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கிறது. இப்படி பலரால் பயன்படுத்தப்படும் செயலியை சிலர் தவறான செயல்களுக்காகவும் பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு தவறாகப் பயன்படுத்தும் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கி, நேர்மையாக பயன்படுத்தும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த முயல்கிறது.
மேலும், மாதம்தோறும் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டிருக்கின்றன என்கிற தகவல்களையும், சரியாக 2-வது மாத துவக்கத்தில் அறிவித்து வருகிறது வாட்ஸ் ஆப் நிறுவனம். அந்த வகையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் எத்தனை கணக்குகள் முடக்கப்பட்டன என்கிற தகவலை வாட்ஸ் ஆப் நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், இந்தியாவில் மட்டும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கடந்த டிசம்பர் மாதம் 36.77 லட்சம் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 13.89 லட்சம் கணக்குகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முடங்க இருப்பதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, கடந்தாண்டு நவம்பர் மாதம் 37.15 லட்சம் கணக்குகளையும், செப்டம்பர் மாதம் 25.85 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் முடக்கியது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட கணக்குகள் தீங்கிழைக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் மேற்கோளிட்டுள்ளது. வாட்ஸ் ஆப் மூலம் ‘பேட் (bad)’ என்று அழைக்கப்படும் இக்கணக்குகள், தனது தளத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது தகவல்கள் பாதுகாப்பாக இருக்க, அவற்றை தடை செய்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து 1,607 புகார் அறிக்கைகளை வாட்ஸ் ஆப் குழு பெற்றது. இந்த புகார்களில், 166 மேல்முறையீடுகள் மீது வாட்ஸ் ஆப் நடவடிக்கை எடுத்திருக்கிறது.