பெண் குழந்தைகளின் மன உளைச்சலுக்கு – பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஒரு காரணமாகும் வெள்ளை நிற பள்ளி சீருடை

பெண் குழந்தைகளின் மன உளைச்சலுக்கு – பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஒரு காரணமாகும் வெள்ளை நிற பள்ளி சீருடை

Share it if you like it

சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பதின்ம வயது கூட இல்லாத பச்சிளம் பள்ளி குழந்தைகள் கூட துன்புறுவது வேதனை. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பள்ளி குழந்தைகள் சீருடையில் பெண் குழந்தைகளின் முழு வெள்ளை சீருடை யும் ஒரு காரணம். பெண் குழந்தைகளின் மீதான வக்கிரம் வன்மம் வளரவும் ஆண் – பெண் குழந்தைகளின் இடையே மனரீதியான பிறழ் முரண் சிந்தனை வளர காரணமாக இருக்கும் இந்த வெள்ளை நிற பள்ளி சீருடை குழந்தைகள் நலன் கருதி தடை செய்யப்பட வேண்டும்.

சமீப காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் சூழல் மாசுபாடு காரணமாக பெண் குழந்தைகள் பத்து வயதிலேயே பூப்படைதல் எய்தும் நிலை வந்து விட்டது . தன் உடலின் பருவமாற்றம் மற்றும் அதன் தாக்கம் பற்றிய எந்த புரிதலும் இல்லாத நிலையில் பூப்பெய்தும் பெண் குழந்தைகளும் பெற்றோரும் இந்த தனியார் பள்ளியின் கட்டாய வெள்ளைக் சீருடை என்ற காரணத்தால் அனுபவிக்கும் மன உளைச்சலுக்கு அளவே இல்லை. கண்ணியமான நாகரீகமான முறையில் ஆடை அணிந்து பள்ளிக்கு போகும் நம் வீட்டு பெண் குழந்தைகள் பிஞ்சு வயதிலேயே பாலியல் சீண்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக இந்த வெள்ளைச் சீருடையும் ஒரு முக்கிய காரணம் .

1980 கள் வரை நடைமுறையில் இருந்து வந்த மேல் சட்டை மட்டும் வெள்ளை கீழாடை அடர் நிறம் என்ற பள்ளி சீருடை முறை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும். குறிப்பாக 6 முதல் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பெண் குழந்தைகளின் சீருடை அடர் நீலம் சிவப்பு மற்றும் அடர் பச்சை உள்ளிட்ட வண்ணங்கள் மட்டும் இருக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பள்ளி சீருடையில் கால்சட்டை அல்லது பாவாடை எதுவாயினும் குட்டை ஆடை மற்றும் வெள்ளை ஆடை தடை செய்யப்பட்ட வேண்டும். பள்ளி நிர்வாகம் விரும்பும் ஏதேனும் ஒரு அடர் வண்ணம் மட்டுமே பள்ளி சீருடையில் பின்பற்ற வேண்டும். என்ற கட்டாயம் வர வேண்டும். தவறினால் பள்ளி அனுமதி உரிமம் இரத்து செய்யப்படும் என்ற நிலை வர வேண்டும்.

இதை பிற்போக்குதனம் என்று குறை கூற பலர் இருக்கலாம் . திருமணம் என்பது சிறை. குடும்ப வாழ்க்கை – உறவு முறை சமூக கட்டமைப்பு எல்லாம் பெண் அடிமைத் தனம். இதை எல்லாம் ஆதரிப்பது ஆணாதிக்க சமூகம். ஏற்று வாழ்வது பிற்போக்கு வாதம் என்று பேசி சமையலறை இல்லா வீடு என்ற சீரழிவிற்க்கும் கள்ள உறவுகளைக் கூட திருமணம் கடந்த உறவு என்று பேசும் பகுத்தறிவாளர்கள் இதற்கு கூட மத சாயம் பூசலாம்.

ஆனால் யதார்த்த வாழ்வில் ஒரு குழந்தையை பெற்று வளர்த்து அதன் எதிர் காலம் சிறக்க நல்ல பள்ளியை தேடி பிடித்து தன் உழைப்பு சம்பாத்யத்தின் பெரும் பகுதியை அந்த குழந்தையின் கல்விக்கு செலவழித்து விட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு வரும் குழந்தை சில நிமிடங்கள் தாமதமானாலும் கை கூப்பி இறைவனை பிரார்த்தனை செய்யும் பெற்றோர்கள் மட்டுமே இந்த வேதனையை உணர முடியும்.

ஒரு குழந்தை துன்புற்ற பிறகு நீதி கேட்டு பதிவு செய்வதை விட வருமுன் காப்பது நல்லது .அதுவே நிரந்தர தீர்வாக இருக்கும்

ஒரு குழந்தை துன்புற்ற பிறகு இறந்த குழந்தையின் புகைப்படத்தை சமூக ஊடக அடையாளமாக வைப்பதாலோ மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக போவதாலோ ஆக போவது ஒன்றும் இல்லை அதை விட வளரும் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சிறு சிறு விஷயத்தில் கூட அலட்சியம் காட்டாமல் கூடுதல் அக்கறை செலுத்தி நாம் பொறுப்பாக நடந்தால் பெண் குழந்தைகளை துன்புறுத்தலுக்கு ஆளாகமலும் காப்பாற்ற முடியும் அதே சமயத்தில் ஆண் குழந்தைகளை ஆரோக்யமான மன சூழலை உருவாக்குவதன் மூலம் அவர்கள் குற்றவாளிகளாக மாறுவதை தடுத்து அவர்கள் எதிர் காலத்தையும் பாதுகாக்க முடியும்.

நம்மில் பலருக்கு பெண் குழந்தைகள் இல்லை என்றால் கூட நாமும் தாயாக தந்தையாக இருப்பதால் குழந்தைகளின் பதட்டமும் நமக்கு புரியும் அந்த குழந்தைகளின் தாய் தந்தையர் மன உளைச்சலும் புரியும்.நாம் ஆண் பெண் யாராக இருந்தாலும் நமக்கு பெண் குழந்தைகள் இல்லாவிட்டால் கூட சமூகத்தின் பொக்கிஷமான பெண் குழந்தைகளின் நலன் பாதுகாப்பு மன அமைதி மற்றும் ஆண் குழந்தைகள் மன நலம் பாதுகாப்பு கருதி இந்த முழு வெள்ளை சீருடை முறையை மாற்றி அமைக்க நம்மாலான முயற்சிகள் செய்ய வேண்டும். அது பெற்றோராக குழந்தைகள் நலன் காக்கும் நமது சமூக கடமை.

இதை எல்லாம் குழந்தைகள் நலன் கருதி தாமாக முன்வந்து செய்ய ஜாக்டோ ஜியோவிற்கோ மாதர் சங்கம் மற்றும் பெண்கள் நல ஆணையம் உள்ளிட்ட யாருக்கும் நேரம் இருக்காது. காரணம் அவர்கள் ன் குழந்தைகள் நல்ல பாதுகாப்பு வட்டத்தில் இருக்கும் . ஆனால் பெரும்பாலான சாமானிய மக்களின் குழந்தைகள் மற்றும் தினமும் பொது மற்றும் தனி போக்குவரத்து மூலம் பயணிக்கும் பள்ளி குழந்தைகள் விடுதிகள் தங்கி இருக்கும் பெண் குழந்தைகள் என்று கண் முன்னே உலவும் பெண் குழந்தைகளின் மனநலம் பாதுகாப்பு கண்ணியம் காக்க வேண்டிய கடமை பொறுப்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

நம் பாரத பூமியில் ஆண்டி முதல் அரசன் வரை யாவருக்குமே அவரவர் குழந்தைகளை விட மேலான செல்வம் என்று இங்கே எதுவும் இல்லை.

நம் குழந்தைகள் நம் செல்வம் நம் குடும்ப வாரிசு என்பதை கடந்து நம் தேசத்தின் சொத்துக்கள். அந்த வகையில் தேசிய சொத்தான வளரும் குழந்தைகளை பாதுகாக்க அவர்கள் நல்ல மன வளர்ச்சி நேர்மறை சிந்தனை ஒழுக்கம் பண்புகள் என்று உயர்ந்த வழியில் வருவதற்கு தேவையான ஆரோக்கியமான சூழலை உருவாக்கி தர வேண்டியது பெற்றோர் கல்வி நிறுவனங்கள் சமூகம் அரசு என்று அனைத்து தரப்பினரின் ஒருமித்த கடமை.


Share it if you like it