சர்வதேச மகளிர் தினம்: இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது?

சர்வதேச மகளிர் தினம்: இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது?

Share it if you like it

உலகமெங்கும் மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த நாள் எதற்காக கொண்டாடப்படுகிறது? எதை உணர்த்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது ? கடந்த 1908-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 15,000 பெண்கள் 8 மணி நேர வேலை, வாக்களிக்கும் உரிமை மற்றும் சிறந்த ஊதியம் ஆகியவற்றைக் கோரி மாபெரும் பேரணி நடத்தினர்.

பெண்களின் இந்த போராட்டத்தை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி 1909-ஆம் ஆண்டு, முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது. அதன்படி அமெரிக்காவில் முதல் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பின் 1910-ம் ஆண்டு உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. இதில் 17 நாடுகளை சேர்ந்த சுமார் 100 பெண்கள் பங்கேற்றனர். அதில் கலந்துகொண்ட ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் அலுவலகத்தின் தலைவரான கிளாரா ஜெட்கின் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்மொழிந்தார். இதை அந்த கூட்டத்தில் இருந்த பெண்கள் அனைவரும் முழு மனதாக ஏற்றுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து 1911-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி, ஆஸ்திரியா டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முதல் முறையாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து 1913 மற்றும் 1914க்கு இடையில், ரஷ்யாவில் பெண்கள் பிப்ரவரி 23-ம் தேதி தங்கள் முதல் மகளிர் தினத்தை கொண்டாடினர்.
அதன் பிறகு 1975-ஆம் ஆண்டு ஐநா சபை மார்ச் 8-ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதி உலகமெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று சர்வதேச மகளிர் தினம் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும் பெண்கள் எவ்வளவு தூரம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக உள்ளது.

அதேசமயம் பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் சமத்துவமின்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாகவும் மாறியுள்ளது.
2023-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் “டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்” என ஐநா அறிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்வியின் முன்னேற்றத்திற்காக போராடும் பெண்கள் மற்றும் சிறுமிகளை கௌரவிக்கும் நோக்கத்தில் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் டிஜிட்டல் திறன்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான அணுகல் பின்னணியில் பெண்களுக்கான பாலின சமத்துவமின்மை நீடிப்பதை ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. இதுவும் இந்த கருப்பொருள் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம்.

டிஜிட்டல் உலகில் இருந்து பெண்களை விலக்கியதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து டிரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் இந்த டிஜிட்டல் பாலின இடைவெளியின் தாக்கத்தை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேலும் 1.5 டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்று ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் கடந்த ஆண்டில் மட்டும் ஆப்கானிஸ்தான், ஈரான், உக்ரைன், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள பெண்கள் போர், வன்முறை, கொள்கை மாற்றங்கள் போன்ற விஷயங்களால் தங்கள் அடிப்படை உரிமைகளை இழந்து போராடி வருகின்றனர்.
குறிப்பாக ஆப்கனில் தலிபான் அரசு பெண்கள் கல்வி கற்பதற்கு தடையாக உள்ளது. ஈரானில் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உயிரிழந்தனர்.

பலர் போலீசார் தாக்குதலில் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் முடிவதற்குள் ஈரானில் பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுக்க சமூக விரோதிகள் அங்கு நூற்றுக்கணக்கான சிறுமிகளுக்கு விஷம் கொடுத்த செய்தி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளன.

பெண்களுக்கான சிறந்த உரிமைகள் மற்றும் தற்போதைய அரசியல் தலைமையில் மாற்றத்துக்கு அழைப்பு விடுத்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கடந்த ஆண்டு துவங்கிய உக்ரைன் போர் காரணமாக உலகெங்கிலும் உணவுப் பாதுகாப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றால் பாலின இடைவெளிகள் மோசமடைந்துள்ளன என்று ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் 2022-ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, அமெரிக்க உச்ச நீதிமன்றம், பெண்கள் கருகலைப்பு செய்வதற்கான உரிமை அளிக்கும் சட்டத்தை ரத்து செய்தது. இது அமெரிக்காவில் பெரும் எதிர்ப்புகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பல தசாப்தங்களாகவே பாலின சமுத்துவமின்மை நிலவி வருகிறது. அண்மையில் எடுத்த கணக்கெடுப்பில் ஆண்களை விட அதிக நேரம் பெண்களே உழைக்கிறார்கள் என தெரியவந்துள்ளது. சராசரியாக ஆண்கள் 7 மணி நேரம் உழைத்தாலும், பெண்கள் 9 முதல் 11, மணி நேரம் உழைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. பெண்கள் அதிக நேரம் உழைத்தாலும் ஆண்களை விட 34% ஊதியம் குறைவாக பெறுகிறார்கள் என 2018-19 ஆம் ஆண்டில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த கணக்கெடுப்பு கூறுகிறது.

இவ்வாறு பெண்களுக்கான எதிரான சூழ்நிலை உலகம் முழுவதும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், ஆங்காங்கே பெண்களுக்கு ஆதரவான சூழ்நிலைகளும் ஏற்பட்டு வருகின்றன. உதாரணமாக ஆர்மீனியா மற்றும் கொலம்பியாவில் மகப்பேறு விடுப்புகால சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. ஸ்பெயின் நாட்டில் மாதவிடாய் சுகாதார விடுப்பு போல கருக்கலைப்புக்கான விடுப்பு வழங்கும் வகையில் சட்டங்களை இயற்றப்பட்டது. அதேபோல் ஐரோப்பிய நாடாளுமன்றம் 10 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு ஜூலை 2026-க்குள் பொது வர்த்தக நிறுவனங்களின் வாரியங்களில் அதிக பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் சட்டத்தை இயற்றியது.

விளையாட்டுத்துறையிலும் பெண்கள் பங்களிப்பு முன்னேற்றம் கண்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டு ஃபிஃபா மகளிர் உலக கோப்பை புதிதாக விரிவுபடுத்தப்பட்டது. இதில் 36 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிக்கு முன்னதாக, அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அதன் ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கு சமமாக ஊதியம் வழங்கும் வகையிலான வரலாற்றுபூர்வ ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது. இதேபோல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கான சமத்துவம் கிடைக்கும் வரை அதற்கான போராட்டங்கள், முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சர்வதேச மகளிர் தினம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமானது. இந்த நாள் பெண்களை கொண்டாடும் தினம். பெண்கள் எதிலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தும் தினம். இன்று பெண்கள் தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும் அதை அங்கீகரிக்கவும் அதற்காக போராடவும் இந்த நாளை கொண்டாடுகிறார்கள். வருங்காலத்தில் சமுதாயத்தில் பெண்கள் சமத்துவம் அடைந்துவிட்டதை கொண்டாடும் தருணமாக சர்வதேச மகளிர் தினம் மாறும் என நம்புவோம்.


Share it if you like it