உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
உலக நாடுகளின் மக்கள்தொகை குறித்து ஐக்கிய நாடு சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி, உலக நாடுகளின் மக்கள்தொகை குறித்து ஐ.நா. இன்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில்தான், சீனாவை காட்டிலும் இந்தியாவின் மக்கள்தொகை நிகழாண்டு மத்திக்குள் அதிகரித்து விடும் என்று கூறியிருக்கிறது. அதாவது, 2023 மத்தியில் இந்தியாவின் மக்கள்தொகை சுமார் 142 கோடியே 86 லட்சமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதேசமயம், சீனாவின் மக்கள்தொகை 142 கோடியே 57 லட்சமாக இருக்கும் என்றும், சீனாவைக் காட்டிலும் மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்துக்கு வரும் என்றும் ஐ.நா. கூறியிருக்கிறது. மேலும், நிகழாண்டு மத்தியில் சீனாவைக் காட்டிலும் இந்தியாவில் சுமார் 29 லட்சம் மக்கள் அதிகம் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உலக மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை எடுக்கப்படும். அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் பிறகு, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இப்பணி தாமதமானது. எனவே, இந்தியாவின் மக்கள்தொகை எந்த நாளில் சீனாவை முந்தும் என்பது குறித்த மிக சரியான தகவலை கணக்கிட முடியவில்லை என்று ஐ.நா. கூறியிருக்கிறது. சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்தாண்டு பிறப்பு விகிதம் குறைந்தது. இதன் காரணமாக மக்கள்தொகை பெருக்கமும் வரலாறு காணாத வகையில் குறைந்தது. அதேசமயம், இந்தியாவில் பிறப்பு விகிதம் சீராக இருந்தது. இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7 சதவீதமாக இருந்தது. இதன் காரணமாகவே இந்தியாவின் மக்கள்தொகை சீனாவை காட்டிலும் அதிகமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.