போர் என்பது ஒட்டுமொத்த மனித குல வரலாற்றின் சில கருப்பு பக்கங்களாக உள்ளது. ஆனபோதிலும் அதே போர் அழிவினை மட்டுமல்லாமல் மாற்றங்களையும் உண்டாக்க வல்லதாய் உள்ளது. அப்படி உலகையே புரட்டிப் போட்ட சில போர்களில் முதன்மையானது இரண்டாம் உலகப்போர். ஏறத்தாழ 6 ஆண்டுகள், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உலகில் அன்றிருந்த அத்தனை அரசாங்கங்களும் பங்கு பெற்று நடத்திய அந்த யுத்தத்தினால் 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் வீரர்கள் நேரடி யுத்தத்திலும், 2 கோடி அளவிலான மக்கள் போரின் விளைவினால் ஏற்பட்ட பஞ்சம் மற்றும் நோயினாலும் மடிந்தனர். இதன் தாக்கம் பல தசாப்தங்களை கடந்தும் உலகில் நின்றது.
போரின் ஆரம்ப புள்ளி ஜெர்மனி போலந்து நாட்டின் மீது தொடுத்த தாக்குதலின் மூலம் தொடங்கியது. அதிலிருந்து ஒவ்வொரு நாடாக போரில் இறங்கத் தொடங்கின. அவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பிரிவாக பிரிந்து போரை நடத்தின. அச்சு நாடுகளின் பிரிவில் ஜெர்மனியின் தலைவர் அடால்ஃப் ஹிட்லரின் தலைமையில் இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த கூட்டணியில் முன்னிலையில் இருந்தன. நேசநாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் முதலில் இந்த கூட்டணி தொடங்கினாலும் பின்னர் அமெரிக்காவும், ரஷ்யாவுமே தலைமை வகித்தன. இன்றுள்ள ஐக்கிய நாடுகள் அனைத்துமே இப்போரின் நேச நாடுகளின் தலைமையில் இருந்தன.
செப்டம்பர் 1, 1939இல் தொடங்கிய போரில் முதல் மூன்று ஆண்டுகளுக்கு அச்சு நாடுகள் வெற்றிகளை குவித்தன. 1942க்கு பின் அந்த வெற்றி அவர்களின் கையை விட்டு நழுவ தொடங்கியது. செப்டம்பர் 2, 1945 வரை தொடர்ந்த இப்போர் உலகிற்கு அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தியது. 1945 ஆகஸ்ட் 6 மற்றும் 8 தேதிகளில் அமெரிக்கா ஜப்பானின் மீது அணு ஆயுதங்களை பிரயோகித்தது. இதனால் ஏறக்குறைய போர் முடிவடைந்தது. ஜெர்மனி சரணடைந்த உடன் போர் முற்றிலுமாக முடிந்தது. நேசநாடுகள் வெற்றி பெற்றன.
ஜெர்மனி இரண்டாக பிளவுபட்டது. ஜப்பான் பொருளாதார ரீதியாக தனித்துவிடப்பட்டது. இத்தாலியில் ஆட்சி மாற்றம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இப்போரின் விளைவாக ஐக்கிய நாடுகள் சபை உருவானது .காலனியாதிக்கம் முடிவடைந்து, உலகிலுள்ள அனைத்து காலனிநாடுகளின் மீதும் ஆக்கிரமிப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அமெரிக்காவும் ரஷ்யாவும் புதிய திறன்மிக்க வல்லரசு நாடுகளாக உருமாறின. அவற்றுக்கிடையே ஒரு பெரும் பனிப்போர் தொடங்க காரணமானது. இந்த போரில் ஒவ்வொரு நாடும் தங்கள் ஒட்டுமொத்த சக்தியையும் அதாவது, ராணுவம், மக்கள், பொருளாதாரம், உற்பத்தி திறன் என அனைத்தையும் பயன்படுத்தின. அதனால் போரின் முடிவிற்கு பின் அவை தங்களை புனரமைத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. பல நாடுகளும் அதை இன்னும் தொடர்ந்து வருகின்றன.
இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட பெரும் அரசியல் மாற்றத்தினால் ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் மீது கொண்ட ஆக்கிரமிப்புகளை விலக்கிக் கொள்ள நிர்பந்திக்கப்பட்டன. ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளின் குரலும் உலக அளவில் ஓங்கி ஒலிக்க தொடங்கியது. இதன் காரணமாக பாரதம் உட்பட பல்வேறு நாடுகள் காலனியாதிக்கத்தினை வெற்றி கொண்டன.
உலகளவில் பெரும் உயிர் சேதத்தினையும், பொருட்சேதத்தினையும் ஏற்படுத்திய இரண்டாம் உலகப் போரின் பெரும் சுமைகளை சுமந்தவாறு செப்டம்பர் ஒன்றாம் நாள் கனத்த மனதுடன் ஆண்டுதோறும் கடந்து போகிறது.
சக்தி விஜய பாரதி.கோ