ஏமன் நாட்டில் ரம்ஜான் இலவசம் பெறச் சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 80-க்கும் மேற்பட்டோர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது ரம்ஜான் நோன்பு காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, பல்வேறு நாடுகளிலும் தனியார் சார்பில் ஏழை இஸ்லாமிய மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இஸ்லாமிய நாடான ஏமனிலும் தனியார் சார்பில் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி தலைநகர் சனாவிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த நிலையில், உதவிப் பொருட்களைப் பெற ஏராளமானோர் ஒரே நேரத்தில் கூடினர்.
அப்போது, ஒருவொருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு உதவிகளைப் பெற முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே, ஒரு பகுதியில் கரன்ட் ஷாக் அடிப்பதாக தகவல் பரவியது. இதனால், மக்கள் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் பலியாகினர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த தகவல் வெளியாகி இருக்கிறது. உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஏமன் நாட்டின் போராட்டக் குழுவான ஹவுத்தி போராளிகள் குழு தங்களின் தொலைக்காட்சியில், அரசின் அலட்சியத்தால் அப்பாவி உயிர்கள் பறிபோனதாக செய்தி வெளியிட்டிருக்கிறது. அச்செய்தியில் ஆங்காங்கே சடலங்கள் வரிசையாக குவித்து வைக்கப்பட்டிருப்பதும் காட்சிப் படுத்தப்பட்டது. இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.